யூசுப் பதானுக்கு கிரிக்கெட் விளையாட ஐந்து மாதம் தடை! பிசிசிஐக்கு நன்றி தெரிவித்த யூசுப்!

யூசுஃப் பதான் தன் தரப்பு விளக்கத்தைத் தெரிவித்தார். அவர், கவனக்குறைவாகவே அந்த மருந்தை எடுத்துக்கொண்டார் என்பது விசாரணையில் உறுதியானது

இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், கடைசியாக 2012ல் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடினார். அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும், உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் கிரிக்கெட்டிலும் தவறாமல் ஆடி வருகிறார்.

இந்த நிலையில், யூசுஃப் பதான், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி, டெல்லியில் நடந்த உள்ளூர் அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டியில் பங்கேற்றார். போட்டிக்கு முன்னர் அவரிடமிருந்து ஊக்க மருந்து தடுப்புச் சோதனைக்காக சிறுநீர் மாதிரி பெறப்பட்டது. சோதனையில், ‘டெர்பூட்டலைன்’ என்ற தடைசெய்யப்பட்ட வேதிப்பொருளை பதான் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது. இது சர்வதேச ஊக்கமருந்து ஆணையத்தால் தடைசெய்யப்பட்ட பொருளாகும்.

ஆகவே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அவரிடம் விசாரணை நடத்தியது. அப்போது யூசுஃப் பதான் தன் தரப்பு விளக்கத்தைத் தெரிவித்தார். அவர், கவனக்குறைவாகவே அந்த மருந்தை எடுத்துக்கொண்டார் என்பது விசாரணையில் உறுதியானது. அந்த வேதிப் பொருள் வழக்கமான ‘சிரப்’களில் கலக்கப்பட்டு இருக்கும் ஒன்றாகும். தொண்டை பிரச்சனைக்காக அந்த மருந்தை அருந்தியதாக யூசுப் தெரிவித்தார்.

எனினும், விதிகளுக்குக் கட்டுப்பட்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் யூசுப் பதானுக்கு 5 மாதம் தடை விதித்தது. விசாரணை தொடங்கிய கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து யூசுஃப் பதான் தடையில் இருந்துவந்தார். 2018 ஜனவரி மாதம் 14ம் தேதி நள்ளிரவோடு யூசுப்பின் தடை முடிவுக்கு வருகிறது.

இந்த விவகாரம் குறித்து பதில் அளித்துள்ள யூசுப் பதான், “எனது தரப்பு நியாயத்தை விசாரித்து ஏற்றுக் கொண்டதற்காக பிசிசிஐ-க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி நிச்சயம் இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருப்பேன். எனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கும் நன்றி. என் மீது கருணை காட்டிய அல்லாவுக்கும் எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன்” என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close