லண்டனில் நேற்று (வெள்ளி) முதல் தனது ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபிக்கான பயிற்சியை தொடங்கிவிட்டது இந்திய அணி. தோனி, கேப்டன் கோலி, ரஹானே உள்ளிட்ட வீரர்கள் பயிற்சி செய்யும் படங்களை பிசிசிஐ சமூக தளங்களில் வெளியிட்டது. அதில் முக்கியமான ஒரு இந்திய வீரர் மிஸ்ஸிங்.. யாரென்று லைட்டாக பார்த்தால், நம்ம யுவராஜ் சிங்.
மிடில் ஆர்டரில் இந்தியாவின் மிகப்பெரிய பலம் என்று கேப்டன் கோலி வர்ணித்த யுவராஜ் சிங், முதல் வலைப்பயிற்சியிலேயே பங்கேற்காமல் இருந்தது ஆச்சர்யப்பட வைத்தது. தொடர்ந்து விசாரித்த போது, உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் யுவராஜ் பயிற்சியில் பங்கேற்கவில்லை என்ற செய்தி கிடைத்தது.
மும்பை மிரர் செய்தியின் படி, 'விரைவில் யுவராஜ் நலம் பெற்றுவிடுவார் என இந்திய நிர்வாகம் எதிர்பார்க்கிறது. ஆனால், நாளை(ஞாயிறு) நடக்கும் நியூசிலாந்திற்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியில் அவர் களமிறங்குவாரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்ல' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு பயிற்சி ஆட்டங்களில் ஆடும் இந்திய அணி, ஜூன் 4-ஆம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.