Yuvraj Singh Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்ந்தவர் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் வீரர் யுவராஜ் சிங். இன்று (டிசம்பர் 12ம் தேதி) தனது பிறந்த 40வது பிறந்த நாளை கொண்டாடும் இந்த மாவீரன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடி தந்தவர் என்றால் நிச்சயம் மிகையாகாது. குறிப்பாக, 2007ல் நடந்த டி20 உலகக் கோப்பை, 2011ல் நடந்த ஒருநாள் உலகக் கோப்பைகளில் இவரின் பங்கு அளப்பரியது.
அறிமுகமே அதிரடி
பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த இந்த அசாத்திய வீரன், தந்தையின் மிகக்கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் மிகச்சிறிய வயதில் பயிற்சியை தொடங்கியவர். 13 வயதில் பஞ்சாப் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணியில் இடம் பிடித்து புருவம் உயரச் செய்திருந்தார். அது மட்டுமல்லாமல் 16 வயதில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான பஞ்சாப் அணியிலும் இடம் பிடித்திருந்தார்.
எம்எஸ் தோனியின் வாழ்க்கைப் படத்தில் (எம்எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி) வருவது போல் ரஞ்சி தொடரில் விக்கெட்டுகள் மற்றும் ரன்களைக் குவித்து இந்திய அணி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். வெகுமதியாக 2000ம் ஆண்டில் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
யுவராஜின் கிரிக்கெட் வாழ்க்கையில் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான தொடரில் இலங்கைக்கு எதிராக 55 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தது தான். எனினும், 2001, 2002ம் ஆண்டு நடந்த ஆட்டங்களில் யுவராஜ் பெரிதும் சோபிக்கமால் ஏமாற்றம் அளித்தார்.
ஆனால், இதே காலகட்டத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இவரின் அதிரடி அனைவரது கவனத்தையும் மீண்டும் ஈர்த்தது. தொடர்ந்து 2002ம் ஆண்டு நடந்த நாட்வெஸ்ட் தொடரில் 63 பந்துகளில் 69 ரன்கள் அவர் எடுத்தது அனைவருக்கும் மிரட்சியை ஏற்படுத்தியது. இந்த ஆட்டத்தில் முன்னாள் வீரர் முகமது கைஃப் உடன் ஜோடி சேர்ந்த யுவராஜ் அணியின் வெற்றியை உறுதி செய்திருந்தார். தற்போது வரை இந்த ஆட்டம் சிறந்த ஒரு நாள் போட்டி சேஸிங்காகவும் இருக்கிறது.
மெதுமெதுவாக சர்வதேச அளவில் கவனம் பெற்று வந்த யுவராஜ் 2003ம் ஆண்டில் வங்கதேசத்திற்கு எதிரன தொடரில் ஹாட்ரிக் சதம் அடித்து மிரட்டினார். அதே ஆண்டில் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் இணைந்த அவர் யார்க்ஷயர் கிளப்பில் கையெழுத்திட்டார். இந்த கிளப்பில் அவர் கையெழுத்திட்டதன் மூலம் சச்சினுக்குப் பிறகு கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய 2வது இந்திய வீரர் என்கிற பெருமையை பெற்றார்.
சிக்ஸர் நாயகன்
ஒருநாள் போட்டி தொடர்களில் இப்படி வெளுத்துவாங்கிய வந்த யுவராஜ்க்கு எதிர்வந்த டி20 உலகக்கோப்பை அவரை அடுத்த தளத்திற்கு அழைத்துச்சென்றது. முதன்முதலாக 2007ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை எம்எஸ் தோனி தலைமை தாங்கினார். அவருக்கு உறுதுணையாக இருக்க துணைகேப்டன் பொறுப்பு யுவராஜ்க்கு வழங்கப்பட்டது.
இந்த தொடரில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் வீசிய 6 பந்துகளையும் சிக்ஸர் விளாசி பிரமிக்க வைத்தார் யுவராஜ். அவர் நிதானமாகவும் நேர்தியாகவும் களத்தில் இருந்து நொறுக்கியது இன்றுவரை எந்தவொரு கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியா ஒரு தருணமாகவே இருக்கிறது.
யுவராஜ் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்ததன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய 4 வது வீரர் மற்றும் 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், டி20 உலகக்கோப்பை தொடரில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்கிற பெருமையையும் அவர் பெற்றார். தவிர, 12 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்த யுவராஜ் அதிவேக அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
யுவராஜின் இந்த அசாத்திய ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்களை சேர்த்து, இங்கிலாந்தை வீழ்த்தியது. இதேபோல் தொடர்ந்து பலம் வாய்ந்தஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் 30 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் இந்தியா எளிமையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
தொடர் நாயகன்
இந்திய அணியில் சில டிராப் -அவுட்களுக்குப் பிறகு 2011 ஐசிசி உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த யுவராஜ் தனது அதிரடி மீண்டும் தொடர்ந்திருந்தார். இம்முறை சிக்ஸர் பவுண்டரி என வாணவேடிக்கை காட்டி ரன்மழை பொழிந்திருந்தார். இந்த தொடரில் அவர் 15 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு 362 ரன்கள் குவித்தும் இருந்தார். எனவே அவர் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.
இந்திய அணி 28 வருடங்களுக்கு பிறகு ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய வீரராகவும் யுவராஜ் இருந்தார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்திய அணிக்காக…
சர்வதேச அரங்கில் இந்திய அணிக்காக 398 போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் 11,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். மேலும் தனது சுழல் மாயாஜலத்தால் 180 விக்கெட்டுகளுக்குமேல் கைப்பற்றியுள்ளார்.
பஞ்சாப் அணியின் முகம்
2008ம் ஆண்டில் ஐபிஎல் தொடர் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் முகமாக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், முதல் இரண்டு சீசன்களில் அந்த அணிக்காக விளையாடி பிறகு புனே வாரியர்ஸ் அணியில் (2011-13) இணைந்தார். பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (2014) அணியால் 14 கோடிக்கும் வாங்கப்பட்டார். தொடர்ந்து அவரை 2015ம் ஆண்டில் டெல்லி டேர்டெவில்ஸ் 16 கோடிக்கு வாங்கியது.
2016ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனும், 2019ல் மும்பை இந்தியன்ஸுடனும் அவர் விளையாடினார். இந்த ஆண்டுகளில் அந்த அணிகள் கோப்பையை வென்று இருந்தன. இதனால், அவர் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் ஆனார் யுவராஜ்.
ஐபிஎல்லில் எந்த அணியில் இடம் பெற்று இருந்தாலும் வழக்கம் போல் சிக்ஸர் பவுண்டரிகளை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்ட மறந்தததில்லை யுவராஜ். இதுவரை 132 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 36 விக்கெட்டுகளையும், 2,750 ரன்களையும் குவித்துள்ளார். இதில் அவர் 2 முறை எடுத்த ஹாட்ரிக் விக்கெட்களும் அடங்கும்.
2011 உலகக் கோப்பையின் போது யுவராஜ் சிங்குக்கு புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது அவர் இரத்த வாந்தி எடுத்திருந்தார். அமெரிக்காவில் செய்யப்பட்ட கீமோதெரபியில் இருந்து மீண்டு வந்த அவர், அதே மின்னல் வேகத்துடன் விளையாட முடியவில்லை. எனவே, அனைத்து வகை கிரிக்கெட்களில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
எவ்வாறாயினும், இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷங்களில் யுவராஜ் சிங்கும் ஒருவர். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆகச் சிறந்த ஆல்ரவுண்டராகவே அவர் வலம் வந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, உலகம் முழுவதும் உள்ள பிரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார் யுவராஜ். சாலை பாதுகாப்பு உலக தொடர் மற்றும் அபுதாபி T10 லீக் ஆகியவற்றிலும் அவர் தற்போது விளையாடி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.