2015... 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்க தோனி தலைமையிலான இந்திய படை ஆஸ்திரேலியா சென்றிருந்தது. உலக சாம்பியனாக இருந்த இந்திய அணி, மீண்டும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு, மீடியாக்களின் விவாதங்கள், வீரர்களின் ஒருங்கிணைப்பு, ஆஸ்திரேலிய மண்ணில் உலகக் கோப்பை என்று மிகப்பெரிய பணியை தனது தோளில் சுமந்து கொண்டு ஆஸ்திரேலியா சென்றிருந்தார் தோனி.
பயிற்சி ஆட்டங்கள் தொடங்க இன்னும் இரண்டே நாட்கள் தான் இருந்தன.
உலகக்கோப்பை தொடருக்கு செல்லும் போது, தோனி மொபைல் எடுத்துச் செல்லவில்லை. இதனால், தோனியின் சக வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கு, தோனியின் மனைவி சாக்ஷியிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வருகிறது. 'தோனிக்கு மகள் பிறந்திருக்கிறாள்' என்று!.
மகிழ்ச்சியான இச்செய்தியை உடனடியாக தோனியிடம் சென்று ரெய்னா தான் முதன் முதலாக தெரிவிக்கிறார். (பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் வெளியிட்ட புத்தகத்தில் இத்தகவல் உள்ளது).
பத்திரிக்கைகள் அனைத்தும் உலகக் கோப்பையை மறந்து, தோனி மகள் குறித்த செய்தியையே ஃபோகஸ் செய்துக் கொண்டிருந்தன. இதுகுறித்து தோனியிடமே செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, "எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். ஆனால், இப்போது நான் நாட்டுப் பணியில் இருக்கிறேன். மத்ததெல்லாம் அதற்கு அப்புறம் தான். இப்போது உலகக்கோப்பையை வெல்வதே முக்கியம்” என்று பதிலளித்தார்.
அதன்பிறகு, தோனியை விட சமூக தளங்களில் தனது மழலையான சேட்டைத்தனத்தால் ஒவ்வொரு முறையும் அதிகம் வைரல் ஆவது ஜிவா தான்.
இந்தக் குட்டிப் பாப்பாவிற்கு இப்போது 4 வயது ஆகிவிட்டது. இன்று ஜிவா தனது நான்காவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜிவாவின் பிறந்தநாள் பரிசாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ இப்போ செம வைரல்!.

