'அசைவம்' என்பது பெரும்பாலான மக்களின் உணவுப் பட்டியலில் முக்கியமான அங்கம். கோடிக்கணக்கான மதிப்பில் வியாபாரம் ஆகி வரும் சந்தை இது. மூக்கைப் பிடிக்கும் சமாச்சாரமாக இருந்தாலும், இதனால் கிடைக்கும் லாபம் என்பது நறுமணத்தை அள்ளி இறைக்கும்.
சென்னையில் சராசரி கடைகளில், சராசரியாக 1 பிளேட் சிக்கன் பிரியாணியின் விலை 100-150 ரூபாய். அதுவே, கொஞ்சம் ஏசி வச்சு, பார்க்கிங் வசதியெல்லாம் அளிக்கும் ஹோட்டல் என்றால் 150+ . இது சிக்கனுக்கான நிலவரம். மட்டன் என்பது சராசரி ஹோட்டலிலேயே 200-ஐ தாண்டும்.
இன்னும், காடை, பீஃப், ஃபோர்க் போன்ற சில வகையறாக்களும் உள்ளது.
ஆனால், இவற்றில் பயன்படுத்தும் கறி உண்மையானதுதானா? மட்டன் பிரியாணி பிளேட்டில் இருப்பதெல்லாம் மட்டன் தானா? சத்தியமாக சாமானிய மக்களான நம்மால் இதை கண்டு பிடிக்கவே முடியாது. எந்தக் கடையில் விலை கம்மியாக அசைவம் கிடைக்கிறதோ, அங்கே தான் நாம் வண்டியை பார்க் செய்வோம்.
ஆனால், பிளேட்டில் நமக்கு வைக்கப்படும் கறி, நாம் கேட்ட கறி தானா? என்பது நமக்கு தெரியாது. ஒருவேளை இப்படியாகக் கூட அந்த கறி இருக்கலாம் என்பதற்கு, இன்று காலை நடந்த சம்பவம் ஒரு எடுத்துக் காட்டாக இருக்கும்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இன்று வந்து சேர்ந்த ஜோத்பூர் எக்ஸ்பிரஸில் 1000 கிலோ நாய் கறியை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே காவல்துறை அதிகாரிகள், உணவு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய இந்த சோதனையில் 1000 கிலோ நாய் கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நாய் கறி சென்னையை சேர்ந்த 'கறி' கணேஷ் என்பவரின் பெயரில் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கறி ணேஷ் சென்னையில் பல உள்ள பெரிய ஹோட்டல்களுக்கு கறி சப்ளை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 1000 கிலோ நாய் கறியை கண்ட போலீசாருக்கே இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மாட்டுக்கறி என்ற பெயரில் வந்திறங்கிய அந்த பார்சல்களை பிரித்து பார்த்த பொது, தோல் உரித்த நிலையில் நாய்கள் இருந்தன.
அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஆள் வாய் திறந்த பிறகே, இது எங்கிருந்து வந்தது? எங்கு சப்ளை செய்ய இருந்தது? எந்தெந்த ஹோட்டல்களுக்கு இது சப்ளை செய்ய இருந்தது? எந்தெந்த ஊர்களுக்கு இது சப்ளை செய்யவிருந்தது? இதற்கு முன்பு இது போன்று எவ்வளவு முறை நாய் கறி சப்ளை செய்யப்பட்டுள்ளது? இதற்காக எத்தனை நாய்கள் கொல்லப்பட்டன? நாய் மட்டும் தானா.... பூனை, கன்றுக் குட்டி என இன்னும் வேற அயிட்டங்கள் அடுத்த ரயிலில் வருகிறதா? இவை உண்மையிலேயே நாய் தானா? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தெரிய வரும்.
அந்த நபர் வாய்த் திறப்பது இருக்கட்டும். இவ்வளவு கிலோ கறியும் வந்திறங்கி இருப்பது சென்னையில். அங்கு ஒரு தெருவுக்கு 2 பிரியாணி கடைகள் உள்ளன. தள்ளுவண்டி, சிறிய ஹோட்டல், மீடியம் பட்ஜெட் ஹோட்டல், பெரிய ஹோட்டல் என நூற்றுக் கணக்கில் உள்ளன. இதில், எந்தெந்த கடைகளுக்கு இந்த நாய் கறி சப்ளை செய்ப்பட இருந்ததோ!
நீங்கள் ஹோட்டலில் சாப்பிடும் கறி கூட இதுவாக இருக்கலாம் என்பதே உண்மை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.