11th Std Admission Entrance Exam For Group Selection Canceled News in Tamil : தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமடைந்த நிலையில், தமிழகத்தில் விதிக்கப்பட்ட தளர்வுகளற்ற முழு ஊரடங்கால் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சூழலில், +1 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் 3-ம் வாரத்தில் அப்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், வகுப்புகள் தொடங்க்கப்பட உள்ளன.
இது தொடர்பாக நேற்று முன் தினம் தமிழக பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில், தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைப் பாடப்பிரிவுகளில் ஏற்கனவே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படும் எண்ணிக்கைக்கு உட்பட்டு மாணவர் சேர விரும்பும் பாடப்பிரிவுகளை மாணவர்களுக்கு ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல், மாணவர் சேர்க்கை கோரும் நிலையில், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக மாணவர் சேர்க்கையை நடத்திடவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பிரிவுக்கு கிடைக்கப் பெறுகிறதோ, அச்சூழலில், அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்து 50 வினாக்கள் குறிப்பிட்ட பள்ளி ஆசிரியர்களால் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டிருந்தது.

பள்ளிக்கல்வி ஆணையரின் இந்த உத்தரவை அடுத்து, பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதிக விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறும் பாடப்பிரிவுகளுக்கு 50 வினாக்களை கீழ்நிலைபாடங்களில் இருந்து தேர்வு செய்து தேர்வினை நடத்தி, அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துவதாக பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். குறிப்பிட்ட பாடப் பிரிவில் சேர அரசுப் பள்ளியை நாடிவரும் மாணவரை வடிகட்டி, அப்பிரிவை மறுப்பது நியாயமற்றது. அரசுப் பள்ளிகளில் தேவை ஏற்பட்டால் கூடுதல் வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தாமல், மாணவர் கோரும் பிரிவை மறுப்பது நியாயமற்ற அணுகுமுறை. கூடுதல் வகுப்புகள் தொடங்க அரசிடம் பணம் இல்லையா? அல்லது போதிய அளவு ஆசிரியர்களை நியமிக்க, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தமிழ் நாட்டில் இல்லையா?
பதினொன்றாம் வகுப்பிற்கு மறைமுகமாக நுழைவுத் தேர்வு என்பது எந்த வகையிலும் ஏற்க இயலாது. சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு, அதே பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்த மாணவர்கள் அதே பள்ளியில் விரும்பும் பாடப்பிரிவில் சேர்க்கப்பட வேண்டும். அதற்கு அடுத்ததாக பள்ளியின் அருகில் வசிப்பவர்கள் கோரும் பிரிவை மறுக்காமல் வழங்க வேண்டும். மிக அதிக அளவில் விண்ணப்பம் வரப்பெற்றால் கூடுதல் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். அதற்குரிய அனுமதி அளித்திட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளைப் பரிசீலித்துப் பள்ளிக் கல்வி ஆணையர் மாணவர் சேர்க்கைக்கான செயல்முறைகள் மாற்றி உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
மேலும், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை கடுமையாக எதிர்க்கும் திமுக அரசு, பதினொன்றாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்த ஆயத்தமாகி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறும் பாடப்பிரிவுகளில், அதற்கென விண்ணப்பித்த மாணவர்களின் 9-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையாக கொண்டு, மாணவர் விருப்பத்திற்கு ஏற்ப பிரிவுகளை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட உத்தரவில், 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு எதுவும் நடத்த தேவையில் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி ஆணையரின் மறு உத்தரவை அடுத்து, பதினொன்றாம் வகுப்பிற்குத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை என்ற வழிக்காட்டுதல் திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம். மக்களாட்சி மாண்பிற்கு மதிப்பளித்து, மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து உரிய மாற்றங்களைச் செய்து, உடனடியாக உத்தரவு வெளியிட்டதற்கு மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர், பள்ளிக் கல்வி ஆணையர் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும், பதினொன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பித்து குறிப்பிட்டப் பாடப் பிரிவைக் கோரும் மாணவர் அனைவரும் அவர் கோரும் பாடப்பிரிவில் சேர்க்கப்பட, கூடுதல் வகுப்புகள் தொடங்க அரசுப் பள்ளிகளுக்கு உரிய அனுமதி வழங்கிட வேண்டும் என்று தமிழ் நாடு அரசை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கேட்டுக் கொள்வதாகவும் கேட்டுக் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil