/tamil-ie/media/media_files/uploads/2017/10/Sakthi.jpg)
வாழ்வாதாரத்திற்காக பாசிமணிகளை விற்கவும், பிச்சை எடுக்கவும் பழக்கப்பட்டவன். 8 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்தியவன். படிக்கும்போது பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களால் கேலிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறான். ஆனால், இப்போது தன்னுடைய சமூகத்தை சேர்ந்த தன்னைப்போல் உள்ள சிறுவர், சிறுமிகளை பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்க உந்துதலாக இருக்கிறான். அதற்காக, 2017-ஆம் ஆண்டிற்கான சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறான், தமிழ்நாட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் சக்தி. இந்த விருது, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுஃப்சாய் பெற்ற விருது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இளம் வயதில் சக்தி செய்த சாதனை மகத்தானது. அப்படி என்ன செய்தான்?
சக்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்தவன். பாசி மணிகளை விற்று பிழைப்பு நடத்திவரும் சக்தியின் குடும்பம், தொழிலுக்காக இடம்பெயர்ந்துகொண்டே இருப்பார்கள். சக்திக்கு உடன்பிறந்தவர்கள் 5 பேர். குடும்ப சூழ்நிலையால், 8 வயதிலேயே அவனது படிப்பு தடைபட்டது. பெற்றோருடன் சேர்ந்து பாசிமணிகள் விற்பதைற்கும், பிச்சை எடுப்பதற்கும் பழகிக்கொண்டான்.
2014-ஆம் ஆண்டு அவனது வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றத்தை சந்தித்த வருடம். ‘அனைவருக்கும் கல்வி திட்டத்தின்’ கீழ் Hand-in-Hand என்ற அரசு சாரா நிறுவனம், அங்குள்ள நரிக்குறவ சமுதாய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து பள்ளிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டது.
ஆனால், அது அவ்வளவு எளிதாக நிறைவேறவில்லை. முதலில் சக்தியை மட்டும் அருகிலுள்ள பள்ளிக்கு அனுப்ப அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர். ஆரம்பத்தில், சக்திக்கு படிக்க செல்வது கடினமாக இருந்தாலும், பின்பு கல்வியை காதலிக்க கற்றுக்கொண்டார். விரைவிலேயே, அவர் தன் வசிப்பிடத்திலிருந்து தொலைவிலுள்ள பூங்காவனத்தில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்திற்கு மாற்றப்பட்டார்.
அப்பள்ளியில் ஆசிரியர்கள் சுகாதாரத்தை கற்றுக்கொடுத்தனர். சிறுவன் சக்தி பள்ளி சீருடையை சுத்தமாக, நேர்த்தியாக அணிந்து பள்ளிக்கு வருவதற்கு பழக்கப்பட்டான். பள்ளியில் கற்றதை தன் குடும்பத்தில் உள்ளவருக்கும் சென்று கற்றுக்கொடுத்தான்.
”தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு நான் மற்ற பிள்ளைகளிடமிருந்து தனிப்பட்டு நல்ல உடைகளை அணிந்திருப்பேன். அப்போது, மற்றவர்கள் என்னிடம் விசாரிப்பார்கள். அவர்களிடம், நன்றாக சாப்பிட்டு, நல்ல தூக்கம், நல்ல படிப்பு இவையெல்லாம் இருந்தால், நாம் சோர்வடைய மாட்டோம் என கூறுவேன். அதனால், மற்ற பெற்றோர்களும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்தனர்”, என்கிறான் சிறுவன் சக்தி.
இப்போது, நரிக்குரவ சமுதாயத்தினர் பெண் பிள்ளைகளையும் மெல்ல மெல்ல பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்தனர். சக்தியின் தூண்டுதலால் தற்போது நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த சுமார் 25 குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.
இது சாதாரணம் அல்ல. அவ்வளவு எளிதில், நரிக்குறவ சமுதாயம் உள்ளிட்ட விளிம்புநிலை மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. அதனால், சக்தியின் இந்த சாதனையை அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், hand-in-hand அமைப்பு சிறுவன் சக்தியின் பெயரை சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருதுக்கு பரிந்துரைத்திருக்கிறது. சக்தியுடன் சேர்ந்து 169 குழந்தைகள் உலகம் முழுவதிலும் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றனர்.
இதுகுறித்து, The News Minute இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியில், "இப்போது 25 பேர் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், இன்னும் அதிகமான குழந்தைகள் படிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த எண்ணிக்கை அதிகமாக வேண்டும். அவர்கள் என்னைப்போன்று இருக்க வேண்டும். என்னைப்போல் படிக்க வேண்டும். என்னைப்போன்று மற்றவர்களுக்கு படிப்பதற்கு அவர்கள் உந்துதலாக இருக்க வேண்டும்”, என சிறுவன் சக்தி கூறுகிறான்.
தற்போது சிறுவன் சக்தி, காஞ்சிபுரத்தில் விடுதியில் தங்கி அரசு பள்ளியில் படித்து வருகிறான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.