முதலமைச்சரை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளதாக டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள் சேர்ந்து, தற்போதைய முதலமைச்சரவை மாற்ற வேண்டும் என ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். முதலமைச்சர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவரை மாற்றி வேறொரு முதலமைச்சரை தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்று ஆளுநரிடம் தெரிவித்திருக்கிறோம்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், சசிகலா இல்லாவிட்டால் இந்த அரசு கிடையாது. 132 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து ஜெயிக்க வேண்டிய இடத்தில், எங்களுக்கு துரோகம் செய்து திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்டவர் பன்னீர் செல்வம். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, கிட்டத்தட்ட 6 மணி நேரம் சட்டமன்றத்தில் இருந்துகொண்டு, எந்தபேச்சும் பேசாமல் அதிமுக அரசு வரவேண்டும் என்பதற்காக வாக்களித்தோம். சசிகலா கூறியதன்பேரில் வாக்களித்து முதலமைச்சராக பொறுப்பேற்றவர்தான் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ஊழல் அரசு என்று கூறியவர் ஓ பன்னீர் செல்வம்
தற்போதைய எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த பன்னீர் செல்வம், இந்த ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குற்றம்சாட்டினார். அதோடு மட்டுமல்லாமல், இரட்டை இலை சின்னத்தை முடக்கி இந்த ஆட்சியை கலைக்க நினைக்க வேண்டும் என நினைத்தார். இப்படியெல்லாம் செய்தவரின் வீட்டிற்கு, அமைச்சர்களை அனுப்பி, அவரின் காலில் விழுந்து அவரை அழைத்து வர வேண்டும் என்பதற்கான அவசியம் என்ன?
எங்களை ஏன் அழைக்கவில்லை?
நாங்கள் 20 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறோம் என்ற நிலையில், எங்களை ஏன் அழைக்கவில்லை. அன்றைக்கு 122 பேர் வாக்களித்தோம் என்பதை மறந்துவிட்டு எடப்பாடி பழனிசாமி அணியினர் செயல்பட்டு வருகின்றனர். வாக்களித்தததை மதித்தாவதது, எங்களிடம் வந்து கட்சி நலன் கருதி அழைத்திருக்கலாம். ஆனால், அவ்வாறு அவர்கள் செய்யவில்லை.
பேச்சுவார்த்தைக்கு தயாரா?
பேச்சுவார்த்தைக்கு எங்களை யாரும் அழைக்கவில்லை என்பதே எங்களது வருத்தம். எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த யாரும் முன்வரவில்லை . எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஊழல் அரசு, அதனை கண்டித்து ஆகஸ்ட் 15-ம் தேதி போராட்டம் நடத்துவேன் என்று ஓ பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எப்படி திடீரென நல்ல அரசாக மாறியது?
இப்படியெல்லாம் கூறியவர்களை ஏற்றுக்கொண்டது ஏன்?
சசிகலாவை நீக்க முடிவு செய்தது வேதனையளிக்கிறது
தற்போது அதிமுக தொண்டர்கள் அனைவரும் வேதனையிலே இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமியை இறக்கிவிட்டு, ஓ பன்னீர்செல்வத்தை கூட முதலமைச்சராக்குங்கள், அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இந்த அரசை உருவாக்கிய சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்பதே எங்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இதற்கு கடவுள் நிச்சயமாக அவர்களை தண்டிப்பார் என்று கூறினார்.