தமிழகத்தில் கடந்த 8 நாட்களில் மொத்தம் 174 மில்லி மீட்டர் மழைப் பொழிவு இருந்ததாக தமிழக அரசு சார்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை துவங்கிய பின்னர் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 27ம் தேதி அன்று துவங்கியுள்ளது. 3ம் தேதி வரை மாநிலத்தில் பெறப்பட்டுள்ள மழைப்பொழிவு 174 மி.மீ ஆகும்.பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒரு மண்டலத்திற்கு இரண்டு அமைச்சர்கள் என நியமிக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் கண்காணித்து வருகின்றனர். அனைத்து மாவட்டங்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலங்களுக்கும் அனுபவம் பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மிக அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 10,640 நபர்கள் 114 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 43 பணியாளர்கள் அடங்கிய ஒரு மாநில பேரிடர் மீட்புக்குழு தாம்பரத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அக்குழு தேவைப்படும் நேரங்களில் தாழ்வான பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும்.
பல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றுவது, அடைப்புகளை நீக்குவது போன்ற பணிகளை கண்காணித்து வருகின்றனர். தேவை ஏற்பட்டால் ஒழிய தங்களது வீடுகளைவிட்டு வெளியே வராமல் இருக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மனித மற்றும் கால்நடை உயிரிழப்பை தவிர்க்க, தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும். ஆபத்தான கட்டிடங்களில் மக்கள் தங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளோரின் கலந்த நீர் மற்றும் கொதிக்க வைத்த நீரை குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அணைகள் மற்றும் குளங்களின் நீர் அளவு கூர்ந்து கண்காணிப்படுகின்றன. உரிய வழிமுறைகளைப் பின்பற்றி, மக்களுக்கு தகவல் கொடுத்த பின்பே, குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்படும். ஆதலால் மக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை மற்றும் வெள்ளம் குறித்த சூழ்நிலைகள், மாநில அவசர கட்டுப்பாட்டு மையம், எழிலகம் (தொலைபேசி எண் 1070), பெருநகர சென்னை மாநகராட்சி (தொலைபேசி எண் 1913) மற்றும் மாவட்டங்களிலுள்ள அவசர கட்டுப்பாட்டு மையங்கள் (தொலைபேசி 1077) மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 2ம் தேதி இரவு சென்னை மாநகரம் 31 செ.மீ அளவு மழை பெற்றபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் ஆகியோர் கொண்ட குழு, மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நிவாரணப் பணிகளை கண்காணித்து ஒருங்கிணைத்தனர்.
அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் 2ம் தேதி இரவு முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் கடந்த 3ம் தேதி சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழையினால் பாதிக்கப்பட்டப் பகுதிகள் நேரில் பார்வையிட்டு, தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும், முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.