தமிழக சட்டமன்றம் தொடர்பான 7 வழக்குகள் விசாரணை : நவ.20-க்கு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவு

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீதும் ராக்கெட் வேகத்தில் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்ததாக ஐகோர்ட்டில் டிடிவி தரப்பு முறையிட்டது.

By: Updated: November 16, 2017, 05:03:54 PM

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீதும் ராக்கெட் வேகத்தில் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்ததாக ஐகோர்ட்டில் டிடிவி தரப்பு முறையிட்டது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் ஆளும் தரப்பு எடுக்கவில்லை. ஆனால் அதன்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கவர்னர் பொறுப்பில் இருந்த வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்த டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.

இது தொடர்பாக டிடிவி அணி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக கொறடா அர.சக்கரபாணி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உள்பட தமிழக சட்டமன்றம் தொடர்பான 7 வழக்குகள் இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிவி தினகரன் அணி தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார்.

அவர் தனது வாதத்தில், ‘கடந்த பிப்ரவரி மாதம் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு நோட்டீஸ் கூட வழங்கப்படவில்லை. எங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவு எதையும் மீறவில்லை. கட்சிக்கோ ஆட்சிக்கோ எதிராக எதையும் செய்யவில்லை. முதல்வர் மீது ஊழல் புகார்கள் இருப்பதால் அவரை மட்டுமே மாற்றவேண்டும் என ஆளுனரிடம் கோரிக்கை வைத்தார்கள்’ என வாதிட்டார்.

‘நம்பிக்கை வாக்கெடுப்பின்போது உங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு வாக்களித்தார்கள்?’ என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அபிஷேக் மனு சிங்வி, ‘கொறடா உத்தரவை பின்பற்றினோம்’ என பதில் தெரிவித்தார். தொடர்ந்து, ‘நாங்கள் 30 பக்க ஆவணங்கள் வழங்கியும் அவற்றை பரிசீலனை செய்யாமல், சபாநாயகர் ராக்கெட் வேகத்தில் நடவடிக்கை எடுத்தார்’ என்றும் அபிஷேக் மனு சிங்வி குறிப்பிட்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீஸ் அடிப்படையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் விதித்த தடையை விலக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பிலும், முதல்வர் தரப்பிலும் வாதிட தலா 20 மணி நேரம் தேவை என கேட்கப்பட்டது.

இந்த வழக்கை விரைவில் முடித்து, சட்டமன்றத்திற்குள் நுழைவதில் டிடிவி தரப்பு ஆர்வமாக இருக்கிறது. ஆனால் முதல்வர் தரப்பு அதற்கு முட்டுக்கட்டை போட எல்லா விதங்களிலும் முயற்சிக்கும் என தெரிகிறது.

மாலை 5.00 : தமிழக சட்டமன்றம் தொடர்பான 7 வழக்குகளையும் நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு உத்தரவிட்டது.

மாலை 4.15 : டிடிவி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ‘ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கம் இல்லை. வேறு முதல்வரை நாங்கள் தேர்வு செய்வோம்’ என்றார்.

மாலை 4.00: டிடிவி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் திமுக.வுடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்க திட்டம் போடுகிறார்கள். அதற்காகவே தங்கள் மீதான நடவடிக்கையை நீக்க கோருகின்றனர் என முதல்வர் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டார்.

பிற்பகல் 2.15 : டிடிவி தரப்பு சார்பில் அபிஷேக் மனு சிங்வி விரிவான வாதங்களை வைத்தார். அதன் விவரம் மேலே தரப்பட்டிருக்கிறது.

2,10 மணி : சட்டமன்ற உரிமைக்குழு சார்பில் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குவது குறித்து விவாதிக்க வேண்டும் என முதல்வர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் கூறினார்.

பிற்பகல் 2.00 : நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் ரவி தொடர்ந்த வழக்கை முதலில் விசாரிக்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:18 mlas disqualification case ttv dhinakaran faction accuses speaker dhanapal

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X