18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம், டெல்லி முதலாளிகளின் கண் அசைவிற்கு ஏற்ப நடந்த நாடகம் என அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கண்டித்திருக்கிறார்.
அதிமுக.வின் சின்னமான இரட்டை இலையில் ஜெயித்தவரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கை வருமாறு..
அதிமுக இரண்டு அணியாக செயல்படும் நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஆகஸ்ட் 23 அன்று பாஜக தலைவர் ஒருவர், இதுபோல தான் நடவடிக்கை வரும் என்று சொல்லியிருந்தார். அதன்படியே சபாநாயகர் செயல்பட்டிருப்பது, இதன் பின்னணி என்ன என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகிறது.
இவ் விஷயத்தில் டெல்லி அரசியல் முதலாளிகளின் கண் அசைவிற்கு ஏற்ப ஒரு நாடகம் அரங்கேறியிருக்கிறது. அந்த 18 எம்.எல்.ஏ.க்களும் வேறு கட்சிகளுக்கு செல்லவில்லை, அதிமுகவின் உட்கட்சி மோதல்களில் அடிப்படையிலேயே முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக செயல்பட்டார்கள். இதில் சபாநாயகர் பொறுமை காத்திருக்க வேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த செப். 20 வரை நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இவ்வளவு அவசரமாக ஒரு முடிவை அறிவித்திருப்பது ஜனநாயக படுகொலையாகும்.
மத்திய அரசையும், ஆளுனரையும் துணைக்கு வைத்துக்கொண்டு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.
நிச்சயமாக நீதிமன்றம் மூலம் இந்த அநீதிக்கு எதிராக நீதி கிடைக்கும் என நம்புகிறோம். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை தமிழக முதல்வருக்கும், தமிழக அமைச்சர்களுக்கும் இத்தருணத்தில் நினைவூட்டுகிறோம். இவ்வாறு தமிமுன் அன்சாரி கூறியிருக்கிறார்.