இரண்டு துணைவேந்தர்களை மட்டும் 'டிக்' செய்த கவர்னர்!

இன்று அமைச்சர் அன்பழகன் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்

அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர்களை நியமிக்க நேற்று கவர்னர் மாளிகையில் நேர்காணல் நடைபெற்றது. கவர்னர் வித்யாசாகர் ராவ் தலைமையில் நடந்த இந்த நேர்காணலின் போது, உயர்கல்வித் துறை அமைச்சருமான அன்பழகன் உடன் இருந்தார்.

இன்று அமைச்சர் அன்பழகன் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமியும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக செல்லத்துரையும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, பரிந்துரைக்கப்பட்ட மூன்று பேரையும் கவர்னர் நிராகரித்து விட்டார். இதனால், மூன்று அல்லது நான்கு மாதங்களில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்கப்படுவார். துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப ஆறு மாதங்களுக்கு முன்பே தேர்வுக்குழு அமைக்கப்படும். விரைவில், கல்லூரிகளில் பேராசியர் மற்றும் துணை பேராசியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.

12 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

×Close
×Close