20 எம்.எல்.ஏ.க்கள், 7 எம்.பி.க்கள் ஆதரவு : எடப்பாடியை மிரள வைத்த டிடிவி.தினகரன்

டிடிவி.தினகரன் பொதுக்கூட்டத்தில் திரண்ட கூட்டத்தைவிட, அதில் 20 எம்.எல்.ஏ.க்களும், 7 எம்.பி.க்களும் பங்கேற்றது எடப்பாடி பழனிசாமியை மிரள வைத்திருக்கிறது.

டிடிவி.தினகரன் ஏற்பாடு செய்த மேலூர் பொதுக்கூட்டத்தில் திரண்ட பெரிய கூட்டத்தைவிட, அதில் 20 எம்.எல்.ஏ.க்களும், 7 எம்.பி.க்களும் பங்கேற்றது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிரள வைத்திருக்கிறது.

ஆட்சியை வைத்தே கொஞ்சம் கொஞ்சமாக அ.தி.மு.க.வை தனது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வருவதுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வியூகம். ஆரம்பத்தில் போர்க்கொடி தூக்கி தனி அணி கண்ட ஓ.பன்னீர்செல்வத்தால், 11 எம்.எல்.ஏ.க்களை தாண்டி திரட்ட முடியவில்லை. அதிலும்கூட கோவை ஆறுகுட்டி, மீண்டும் எடப்பாடி முகாமுக்கு வந்துவிட்டார்.

122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் நடைபெறும் ஆட்சியை வைத்தே தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் வரை மெஜாரிட்டி நிர்வாகிகளை தனது பக்கத்தில் எடப்பாடி தக்க வைத்தார். ஆக, எடப்பாடியிம் நிஜ பலம், 122 எம்.எல்.ஏ.க்களும், அவர்கள் மூலமாக நடக்கும் ஆட்சியும்தான். இதில் அரை டஜன் பேர் கழன்றாலும்கூட, ஆட்சிக் கட்டில் ஆட ஆரம்பித்துவிடும்.

மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி.தினகரன்

எனவேதான் ஆகஸ்ட் 14-ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் டிடிவி.தினகரன் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் செல்வதை தடுக்க எடப்பாடி தரப்பு கடும் பிரயத்தனம் செய்தது. டிடிவி.தினகரனால் அண்மையில் விவசாய அணி மாநில பொறுப்பில் நியமிக்கப்பட்ட திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸை முன்தினமே சென்னைக்கு அழைத்து எடப்பாடியை சந்திக்க வைத்தனர். டிடிவி.தினகரன் சிறையில் இருந்து வெளியே வந்தபோது அவரை சந்தித்த 37 எம்.எல்.ஏ.க்களில் அதிகபட்சம் 10 பேர் மேலூர் பொதுக்கூட்டத்திற்கு சென்றாலே ஆச்சர்யம் என்கிற அளவில்தான் அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

ஆனால் எடப்பாடி தரப்பு அதிரும் விதமாக மேலூரில் பெரும் கூட்டம் திரண்டதோடு, 20 எம்.எல்.ஏ.க்களும், 7 எம்.பி.க்களும் டிடிவி பின்னால் அணிவகுத்தார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் பட்டியல் இது…

சட்டமன்ற உறுப்பினர்கள்:
1.அறவக்குறிச்சி- செந்தில் பாலாஜி, 2.ஆண்டிபட்டி – தங்கதமிழ்செல்வன், 3.பாப்பிரெட்டிபட்டி-பழனியப்பன், 4. பெருந்துறை தோப்பு வெங்கடாசலம், 5.தஞ்சை-ரெங்கசாமி, 6.ஸ்ரீவில்லிபுத்தூர் – சந்திரபிரபா, 7.சாத்ததூர்- சுப்பிரமணியன், 8.மானாமதுரை கென்னடிமாரியப்பன், 9.எஸ்.டி.கே.ஜக்கையன், 10.ஓட்டபிடாரம் – சுந்தர்ராஜ், 11.தங்கதுரை ( நிலக்கோட்டை ) ,

12.பெரியகுளம்-கதிர்காமு, 13.வெற்றிவேல்-பெரம்பூர், 14.டாக்டர்.முத்தையா-பரமக்குடி, 15.பூந்தமல்லி – ஏழுமலை, 16.சோழிங்கநல்லூர் – பார்த்திபன், 17.குடியாத்தம் – ஜெயந்திபத்மநாபன், 18.விளாத்திகுளம் – உமாமகேஸ்வரி, 19.அரூர் – முருகன், 20. ஆம்பூர்- பாலசுப்பிரமணியம்

மேலூரில் டிடிவி.தினகரன் பொதுக்கூட்டத்தில் திரண்ட கூட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் :
1.செந்தில்நாதன் ( சிவகங்கை ), 2.ஏ.பி.நாகராஜன் ( கோவை ),
3.ராதாகிருஷ்ணன் ( விருதுநகர் ), 4.வசந்திமுருகேசன் ( தென்காசி ), 5. நவவீத கிருஷ்ணன், 6. விஜிலா ஆனந்த், 7. கோகுல கிருஷ்ணன் (புதுவை)

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் செல்வதற்கு முன்பு அளித்த பேட்டியில், ‘தேவைப்பட்டால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவோம்’ என்றார். ஓ.பி.எஸ். தரப்பும்கூட இந்த ஆட்சியை கவிழ்த்தால்தான் கட்சியை கைப்பற்ற முடியும் என்கிற மனநிலையிலேயே இருப்பதாக தெரிகிறது. இந்தச் சூழலில் டிடிவி.தினகரன் தரப்பு தங்கள் பக்கம் தற்போது வைத்திருக்கும் 20 எம்.எல்.ஏ.க்களில் மூன்றில் ஒரு பகுதியினரை ஆட்சிக்கு எதிராக ஓட்டுப் போட வைத்தாலே ஆட்சி கவிழும் சூழல் உருவாகும். இதை எடப்பாடி எப்படி சமாளிக்கப் போகிறார்?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close