அந்தரத்தில் தொங்கும் பாலம்: கேள்விக் கணைகளை தொடுத்த நீதிபதி!

அனைத்து துறைகளில் அரசு திட்டங்களை முறையாக செயல்படுத்த தனி அமைச்சகத்தை அல்லது அமைப்பை ஏன் ஏற்படுத்தக்கூடாது?

நாமக்கல் மாவட்டம் சோலசிராமணி பகுதியையும், ஈரோடு மாவட்டம் பசூரையும் இணைக்கும் வகையில் 30 கோடி ரூபாய் செலவில் 16 தூண்களுடன் 450 மீட்டர் தூரத்திற்கு காவேரி ஆற்றல் தடுப்பணையுடன் கூடிய பாலம் கட்டப்பட்டது. இதில் 15 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு மின் உற்பத்தி நிலையங்களும் உள்ளன.

கடந்த 2013ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலம் சேதமடைந்து அதன் தூண்கள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாகவும், பத்திரிகைகளில் செய்தியாகவும் கடந்த மாதம் வெளியாகின.

இந்த செய்திகளின் அடிப்படையில்  தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றத்தி தலைமை நீதிபதிக்கு  நீதிபதி கிருபாகரன், கடிதம் அளித்துள்ளார்.

அதில், பாபிலோன் தொங்குத் தோட்டம் உலக அதிசயம். இப்போது பாலத்தின் தூண்கள் தொங்குவது அதிசயமாக உள்ளது என்று வேதனை தெரிவித்தார். மேலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பெரிய கோயில், ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கல்லணை, 125 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட உயர்நீதிமன்றம் ஆகியவை உறுதியாக இருக்கும் நிலையில்  4 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் சேதமடைந்தது குறித்து ஆச்சரியம் தெரிவித்தார். மேலும் சமீபத்தில் கட்டப்பட்ட திருச்சி, திண்டிவனம் நீதிமன்ற கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, நீதிமன்ற கட்டிடம் கூட தரத்துடன் கட்டப்படுவதில்லை என வேதனை தெரிவித்தார்.

மேலும், மக்களின் நலன் கருதி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர், நில நிர்வாக துறை செயலாளர், வீட்டுவசதி துறை செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் இந்த நீதிமன்றம் கீழ்கண்ட கேள்விகளை கேட்கிறது” என்றார். அதன் விவரம் பின்வருமாறு:

தரமற்ற கட்டுமானங்களை தவிர்க்க புதிய கண்காணிப்பு  நடைமுறையை ஏன் ஏற்படுத்தக்கூடாது?

நாமக்கல் பாலம் கட்ட எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது ?

அந்த பாலம் சேதமடைய மோசமான கட்டுமானம் காரணமா ? மோசமான பராமரிப்பு காரணமா ?

பாலம் கட்டும் முன் மண் பரிசோதனை உள்ளிட்ட தேவையான ஆய்வுகள் செய்யப்பட்டதா?

தரக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டதா?

கட்டுமான பணிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தார்களா ?

சகட்டுமேனிக்கு மணல் அள்ளியதால் பாலம் சேதமடைந்ததா?

பாலம் கட்ட பயன்படுத்திய பொருட்கள் தரமானவையா என்பதை கண்டறிய நிபுணர் குழுவை அரசு அமைக்காதது ஏன் ?

தரம்குறைந்த கட்டுமானத்துக்கு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் ஊழல் நடவடிக்கைதான் காரணமா?

பொதுத்திட்டங்களை செயல்படுத்தும் போது அந்த பணிகளுக்கான மூலப்பொருட்கள் தரமானவையா என்பதை சரிபார்க்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாதது ஏன் ?

ஒப்பந்ததாரர்கள் பணிகளை முடிக்கும் முன்பே அதற்குரிய தொகை கொடுக்கப்படுகிறதா ?

தரமற்ற கட்டுமானங்களை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா ?

அக்கறை இல்லாமல் செயல்பட்ட அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா ? அப்படியானால் கடந்த 20 ஆண்டுகளில் எத்தனை வழக்குகள் பதியப்பட்டது அதன் நிலை என்ன ?

பாலங்கள் அருகே மணல் குவாரிகளை அரசு கண்காணிக்கிறதா ?

மாநிலம் முழுவதும் உள்ள பாலங்களின் வலுவை சோதிக்க ஐ.ஐ.டி பேராசிரியர் தலைமையில் நிபுணர் குழுவை ஏன் அமைக்க கூடாது ?

அனைத்து துறைகளில் அரசு திட்டங்களை முறையாக செயல்படுத்த தனி அமைச்சகத்தை அல்லது அமைப்பை ஏன் ஏற்படுத்தக்கூடாது ?

ஒவ்வொரு துறையிலும் எதிர்காலத்தில் திட்ட பணிகளின் தரத்தை பரிசோதிக்க ஏன் பறக்கும் படைகளை அமைக்கக்கூடாது ?

அரசின் அனைத்து திட்டங்கள் தொடர்பான மதிப்பீடு, கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட புள்ளி விவரங்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தனி இணையதளத்தை ஏன் ஏற்படுத்தக்கூடாது ?

இது தரமற்ற கட்டுமானங்களை தவிர்க்க புதிய கண்காணிப்பு நடைமுறையை ஏன் ஏற்படுத்தக்கூடாது?” என கேள்வி எழுப்பினார்.

இதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுசம்பந்தமாக ஆறு வாரங்களில் பதிலளிக்க தமிழக தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
×Close
×Close