“சோதனை மேல் சோதனை போதுமடா சாமி”… விரைவில் ஆட்சி மாற்றம் : முக ஸ்டாலின்

இருள் சூழ்ந்த தமிழகத்தில் சூரியக் கதிர்கள் வெளிச்சத்தை நிச்சயம் பரப்பும்

By: May 23, 2017, 1:48:25 PM

இது குறித்து திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கண்டெய்னர் லாரிகளில் கொள்ளைப் பணமும், கவர் கவராக வீடுகள் தோறும் வழங்கப்பட்ட லஞ்சப் பணமும் தேர்தல் ஆணையத்தின் கண்களுக்குப் ‘புலப்படாமல்’ போனதால் கடந்த ஓராண்டுக்கு முன்- 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. அதிகார பலத்தால் வென்ற அதிமுக-வுக்கும், அநியாயமாக வெற்றி வாய்ப்பை இழந்த திமுக-வுக்கவுக்கான வாக்கு வித்தியாசம் வெறும் 1.1% தான்.

‘அதிகாரவெறி’ யால் ஏற்பட்ட மாற்றம்
அதிமுக-வினர் மீண்டும் பதவியேற்றுக் கொண்டு மே 22-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஒரு வருடத்தில் மூன்று முதலமைச்சர்கள். ஒரு மாற்றம் இயற்கையாக ஏற்பட்டது என்றாலும், இரு முதல்வர்கள் மாற்றம் ‘அதிகாரவெறி’ யால் ஏற்பட்ட மாற்றம். முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துத் துறைகளிலும் இந்திய அளவில் கடைசி இடம் என்பதும், முன்னிலை பெற்றிருந்த துறைகளிலும் இமாலய ஊழல் என்பதுமே இந்த ஆட்சியின் வேதனைமிகுந்த சாதனையாக இருக்கிறது. இது இந்த ஓராண்டு காலத்தில் நிகழ்ந்ததல்ல, ஜெயலலிதா ஆட்சி செய்த 5 ஆண்டுகளிலும் இதே அவல நிலைதான்.

தமிழ்நாடே திவாலாகும் நிலை
தற்போது தமிழக அரசின் நேரடி கடன் சுமை 3 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது. இதுபோக, மின்துறை உள்ளிட்ட பிற துறைகளின் மறைமுக கடன் சுமைகளையும் சேர்த்தால் 5 லட்சம் கோடி என்கிற அளவிற்கு, தமிழ்நாடே திவாலாகும் நிலையில்தான் அரசாங்கத்தின் கஜானா காலியாகி உள்ளது.

வாக்களித்த மக்களின் அடிப்படைத் தேவை உணவும் குடிநீரும்தான். அதைக்கூட உறுதி செய்ய முடியாத கையாலாகாத ஆட்சியை தமிழகம் சந்தித்துச் சகித்துக் கொண்டிருக்கிறது. பொதுவிநியோகத் திட்டம் என்றால் தமிழகத்தை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்று திமுக ஆட்சியின்போது உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. ஆனால் இன்று அந்தத் திட்டம் சீரழிக்கப்பட்டு, நியாய விலைக்கடைகளில் பருப்பு இல்லை, எண்ணெய் இல்லை, சர்க்கரை இல்லை, தரமான அரிசி இல்லை என்கிற நிலை உருவாகி, ஏழை மக்களை பட்டினிக் கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

தவித்த வாய்க்குத் தண்ணீர் தரமுடியாத அரசு
ஒவ்வொரு வீட்டுக்கும் நாளொன்றுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவோம் என்று 2011-ல் அதிமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை இந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை.

கனிமவளங்கள் கொள்ளை
ஆற்று மணலில் தொடங்கி தாது மணல், சவுடு மணல், கிரானைட் உள்பட அனைத்து கனிமவளங்களும் தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாகத் தொடர்கொள்ளை அடிக்கப்படுவதை நீதிமன்றமே பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறது, அவற்றைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையையும் இந்த ஆட்சியாளர்கள் முறையாக மேற்கொள்ளவில்லை. புதிய தாதுமணல் கொள்கை வகுக்கப் போகிறோம் என்றவர்கள் இப்போது அதை வசதியாக மறந்துவிட்டு, தாது மணல் கொள்ளை குறித்த விசாரணை அறிக்கையையும் கிடப்பில் போட்டு விட்டார்கள்.

விவசாயிகள் தற்கொலை
இயற்கை வளங்கள் கொள்ளை போனதால் விவசாயிகளின் வாழ்வு தரிசு நிலமாக மாறிவிட்டது. கடந்த 6 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனம் வெதும்பி, தற்கொலையாலும் அதிர்ச்சி மரணங்களாலும் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களின் உயிரிழப்பை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலும் கூட கொச்சைப்படுத்திய இரக்கமற்ற ஆட்சியாளர்களால் தமிழ்நாடு ஹிட்லரிசத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறது.

நிர்வாணமாக ஓட வேண்டிய அவலம்
நிர்வாக செயலற்ற – மக்கள் விரோத கொடுங்கோல் அ.தி.மு.க. அரசிடம் முறையிட்டுப் பயனில்லை என்ற நிலையில், தமிழக விவசாயிகள் இந்தியத் தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தை நடத்தி, நிர்வாணமாக ஓட வேண்டிய அவலத்திற்குள்ளானதை மறக்கமுடியுமா? உயர்நீதிமன்றமே உத்தரவிட்டும் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய மறுக்கும் அநீதி அதிமுக ஆட்சியில் நிலவுகிறது.

ஜெயலலிதா விஷன்-2023
ஜெயலலிதா விஷன்-2023 எனும் தொலைநோக்குத் திட்டத்திற்கான கையேட்டினை வெளியிட்டார். அது வெறும் ஏட்டுச் சுரைக்காயாக உள்ளது. அதுபோல அவர் காலதாமதமாக நடத்திய உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 2 லட்சத்து 42ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் 10% முதலீடு கூட தமிழகத்திற்கு வரவில்லை. எவ்வித உள்கட்டமைப்பு வசதியையும் உருவாக்கித் தராத அதிமுக அரசை நம்பி தமிழகத்திற்கு வருவதற்கு உள்நாட்டு – வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை.

திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சிக்காகத் தமிழகத்தில் காட்டப்பட்ட அக்கறையை நம்பி வரக்கூடிய ஒன்றிரண்டு வெளிநாட்டு நிறுவனங்களும் அதிமுக ஆட்சியாளர்கள் கேட்கும் லஞ்சத் தொகையைக் கண்டு மிரண்டு, அண்டை மாநிலங்களுக்கு ஓட்டம் எடுக்கக்கூடிய மோசமான நிலையில்தான தமிழகம் இருக்கிறது. கியா மோட்டார் தொழிற்சாலையும் சிண்டெல் தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் இதற்கான அண்மைக்கால எடுத்துக்காட்டுகள்.

துணைவேந்தர்கள் பதவி
தமிழகத்தில் மூன்று பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் பதவி வருடக் கணக்கில் காலியாக இருக்கிறது. உயர்கல்வியிலிருந்து பள்ளிக்கல்வி வரை அனைத்திலும் ஊழல் முடைநாற்றம் வீசுகிறது. தமிழகத்தின் கிராமப்புற, ஏழை மாணவர்களைப் பாதிக்கக்கூடிய நீட் தேர்விலிருந்து அவர்களைக் காப்பாற்ற வக்கற்ற அரசாங்கம் நடைபெறுகிறது.

தமிழக காவல்துறை தரை தட்டி நிற்கிறது
கடந்த ஆறாண்டுகளாக தமிழகத்தில் வழிப்பறி தொடங்கி கொலை – கொள்ளை – பாலியல் குற்றங்கள் அதிகரித்தபடியே உள்ளன. காவல்துறை என்பது மக்களைப் பாதுகாப்பதற்குப் பதில், குடியிருப்புப் பகுதிகளில் மதுபானக் கடைகளைத் திறக்காதீர்கள் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து ஜனநாயக வழியில் போராடும் பெண்களையும் இளைஞர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கி, கைது செய்யும் ஏவல்துறையாக மாறியுள்ளது. ஆறு வருடமாக மாலுமி இல்லாத கப்பலாக தமிழக காவல்துறை தரை தட்டி நிற்கிறது.

லோக் அயுக்தா
அமைச்சர்களும் ஆளுங்கட்சியினரும் ஊழல் விளையாட்டில் புகுந்து போட்டிப்போட்டுக் கொண்டு விளையாடுவது குறித்து வெளிப்படையான புகார்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஊழலை ஓழிக்கும் ’லோக் அயுக்தா’ அமைப்பைக் கொண்டு வர அஞ்சி நடுங்குகிறார்கள். வருமானவரித்துறையின் சோதனைக்குப் பதவியில் இருக்கும் அமைச்சர்களே ஆளாகின்றனர். அதைவிடக் கேவலமாக, தமிழகத்தின் தலைமைச் செயலகத்திலேயே துணை ராணுவத்தைக் கொண்டு வந்து நிறுத்தி, வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

மடியில் கனம் இருப்பதால் அவர்கள் மண்டியிட்டுக் கிடக்கும் நிலை
மாநில சுயாட்சிக் குரல் ஓங்கி ஒலித்த மண்ணில், இன்றைய ஆட்சியாளர்கள் மத்திய அரசின் உத்தரவுக்கேற்ப பொம்மைகளாக ஆடுகிறார்கள். தலைமைச் செயலகத்தில் மத்திய அமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களும் மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள்.

மடியில் கனம் இருப்பதால் அவர்கள் மண்டியிட்டுக் கிடக்கும் நிலை ஏற்பட்டு தமிழக நலன்கள் பாதிக்கப்படுகிறது. வெள்ளம், வர்தா புயல், வறட்சி என எதற்கும் மத்திய அரசிடம் கேட்ட நிதியைப் பெற முடியாத கையாலாகாத ஆட்சி ஒரு ’காட்சிப் பொருளாகவே’ இருக்கிறது.

110 அறிவிப்புகள் தூசுபடிந்து தூங்குகின்றன
2011, 2016 ஆகிய இரு அதிமுக தேர்தல் அறிக்கைகளில் அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, இல்லத்தரசிகளுக்குக் கைபேசி, நதிகள் இணைப்பு, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை பெருக்குவது போன்ற ’வாக்குறுதிகள்’ இன்று அதிமுக ஆட்சியில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

110 அறிவிப்புகள் தூசுபடிந்து தூங்குகின்றன. நிதி நிலை அறிவிப்புகள் நிம்மதியாக குறட்டை விட்டு படுத்திருக்கின்றன. மான்யக் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் பெற சட்டமன்றத்தைக் கூட கூட்டாமல் ஜனநாயகத்தின் குரல்வளையில் காலை வைத்து மிதிக்கும் கல்நெஞ்சம் கொண்ட ஆட்சி நடக்கிறது.

நம் மக்கள். நம் இனம்
வலிமைமிகுந்த எதிர்க்கட்சியான திமுக களத்தில் இறங்கி மக்களின் துணையுடன் நீர்நிலைகளைப் பராமரித்தல், நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்தல், அரசுப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் ஆய்வு செய்து விரைவுபடுத்துதல் என மக்களின் உற்ற நண்பனாகச் செயல்பட்டு வருகிறது. “நம் மக்கள். நம் இனம்” என்ற உணர்வுடன் தமிழக மக்களுக்கான இந்தப் பணிகள் தொடர வேண்டும்.

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக ஓராண்டு கால சோதனை என்பதை அனுபவிக்கும் மக்கள் “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” என்று இன்றைக்கு எரிமலை போல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். வேதனைகள் மிகுந்த இந்த ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும். ஆறு ஆண்டுகளாக இருள் சூழ்ந்த தமிழகத்தில் சூரியக் கதிர்கள் வெளிச்சத்தை நிச்சயம் பரப்பும். எம் மக்களுடன் இணைந்து நின்று திமுக எத்திசையிலும் வெல்லும்.

இவ்வாவறு அவர் கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:2427regime change in tn will happen soon says mk stalin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X