டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் வருகிற செப்டம்பர் மாதம் 20-ம் தேதி தீர்ப்பு வழங்கும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கடந்த 2008-ஆம் ஆண்டு முறைகேடுகள் நடந்ததாக கூறி, கடந்த 2009-ஆம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்டது. அதன்படி துவங்கிய விசாரணையில், இந்த முறைகேடுகளால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மற்றும் 3 நிறுவனங்கள் என 17 பேருக்கு எதிரான இந்த வழக்கு, முதலில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடந்து வந்தது. அதன்பின்னர், கடந்த 2011-ஆம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நீதிபதி ஓபி ஷைனி தலைமையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றம் சாட்டப்பட்டோர் மீது, குற்றச்சதி, ஏமாற்றுதல், மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், அரசு பதவியை தவறாக பயன்படுத்துதல், லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறுபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, ஆகஸ்ட் 25-ம் தேதி (இன்று) தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான இந்த வழக்கு மீதான தீர்ப்பு தேதி, வருகிற செப்டம்பர் மாதம் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு தயாராகாததால் கால அவகாசம் தேவைப்படுகிறது என நீதிபதி ஷைனி விளக்கமளித்துள்ளார். இதையடுத்து, செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.