ஓய்வூதியம், நிலுவைத்தொகை உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், நேற்றுமுன்தினம் நடைபெற்ற போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடனான இறுதிகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், மாநிலத்தின் பல பகுதிகளில், நேற்றுமுன்தினம் முதலே பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு, தொழிலாளர் நலத்துறை தனித்துணை ஆணையர் யாசின் பேகம் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இந்த பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் யாரும் வரவில்லை என சிஐடியு, தொமுச சங்கங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், மாற்று ஓட்டுனர்கள், நடத்துனர்களை வைத்து சில மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அப்பேருந்துகள் மீது சிலர் தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகிறது. இதுவரை 36 அரசுப் பேருந்துகள் மீது கல் வீச்சு நடத்தப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை பணி செய்ய விடாமல் இடையூறு செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.