தமிழக முழுவதும் பொது சுகாதாரத்துறை சார்பில் நேற்று (செப்.18) 50 ஆயிரம் இடங்களில் 37வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை தி.நகரில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் இந்தாண்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 1,044 பேருக்கு எச்1என்1 இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் (H1N1 influenza fever) பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல், சளி, தலைவலி மற்றும் சோர்வாக உள்ள குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். இதுகுறித்து அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி போன்ற நிலை தமிழ்நாட்டில் இல்லை. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் அவசரநிலை தற்போது இல்லை" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "காய்ச்சல், டெங்கு, எச்1என்1 இன்ஃப்ளூயன்சா, கொரோனாவுக்கு எதிராக அரசு தொடர்ந்து போராடி வருகிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுஇடங்களில் முகக் கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
கடந்த இரண்டு நாட்களாக, மாநிலத்தில், குறிப்பாக சென்னை மற்றும் கோயம்புத்தூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பாதிப்பு குறையத் தொடங்கியதால், மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போடுவதை நிறுத்திக் கொண்டனர். தகுதியானவர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
18 வயது மேற்பட்டவர்கள் முதல் டோஸ் தடுப்பூசி 96.50% பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். 2வது டோஸ் தடுப்பூசி 91.10% பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். அக்டோபர் மாதம் முதல் வியாழக்கிழமைகளில் அனைத்து அரசுப் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்படும். அதேபோல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் புதன்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறும். மெகா தடுப்பூசி முகாம் செப்டம்பர் 25ஆம் தேதியுடன் முடிவுடையும்" என்று கூறினார்.
மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும்
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநிலம் முழுவதும் எச்1என்1 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை நிலைமையை ஆய்வு செய்து, மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும்.
பொதுமக்களிடையே பீதியை தவிர்க்க, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நோய் பரவலைக் கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 24x7 வார்டுகள் அமைக்க வேண்டும். காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது என்று தெரிவித்தார்.
பள்ளிகளை மூட வேண்டும்
சென்னை: தமிழகத்தில் குழந்தைகளிடையே எச்1என்1 காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தலைவர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடக்க நிலை வரை பள்ளிகளை மூடவும், நோய் கட்டுக்குள் வரும் வரை காலாண்டு தேர்வுகளை ஒத்திவைக்கவும் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தினார். காய்ச்சலால் அதிக பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது கவலை அளிக்கிறது . பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.