சிவகங்கை மாவட்டம், திருபுவனம் வட்டம், கீழடி அருகே அமைந்துள்ள பள்ளிச் சந்தை திடலில் இந்தியத் தொல்லியல் துறையினரால் கடந்த 3 ஆண்டுகளாக அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமானங்கள் மற்றும் பலவகையான தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன.
முதற்கட்ட அகழ்வாராய்ச்சியில் 2200 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கிடைத்தன.
அவற்றில் 1500-க்கும் மேற்பட்டவை மணிகள். மொத்த மணிகளில் 90 விழுக்காடு கண்ணாடியில் செய்யப்பட்டவை. மீதமுள்ள மணிகள் பளிங்கு, சூதுபவளம், பச்சைக்கல் மற்றும் சுடுமண்ணில் செய்யப்பட்டவையாகும். இதுதவிர தந்தத்தில் செய்த சீப்பின் உடைந்த பகுதி, விளையாட்டுக் காய்கள், காதணிகள், செப்பு, எலும்பு முனைகள், இரும்பு உளிகள் போன்ற பொருள்கள் கிடைத்துள்ளன.
14 தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானையோடுகளும் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒளிய (ன்) என்ற முழுப்பெயரும் மற்றவை தனிநபர்களின் பெயர்களில் ஓரிரு எழுத்துக்கள் காணப்படுகின்றன. மேலும் சதுர மற்றும் வட்ட வடிவிலான தேய்ந்த செப்புக் காசுகள், 5 தங்கப் பொருள்கள், ஒரு சில மண்ணுருவங்களும் அகழாய்வில் இதுவரை கிடைத்துள்ளன.
2016 ஜனவரி மாதம் 2 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இதில் மருத்துவ குடுவைகள், பழங்கால கிணறு, தொழிற்சாலை, அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன. உலகிலேயே மூத்த இனம் தமிழனம் என உறுதிப்படுத்தக் கூடிய பல்வேறு சான்றுகள் கிடைத்தன .
இரண்டு கட்ட அகழாய்வின் முடிவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டது.
3 ஆம் கட்ட அகழாய்வுக்கு 2017 ஜனவரி முதல் உரிமம் வழங்கப்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின் கடந்த மே மாதம் 27-ஆம் தேதி 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இதற்காக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பல்வேறு பிரச்னைகள் காரணமாக மத்திய தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமுக்கு மாற்றப்பட்டு ஸ்ரீராமன் என்பவர் நியமிக்கப்பட்டார். ’இது தமிழன் வரலாற்றை மறைக்கும் செயல்’ என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழர்களின் வரலாற்றை மறைக்க மத்திய அரசு முயல்வதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டின.
இந்த நிலையில், மூன்றாம் கட்ட ஆய்வுப் பணிகளின் போது தோண்டப்பட்ட குழிகள் தற்போது மூடப்பட்டு வருகின்றது. பொக்லின் இயந்திரம் கொண்டு, தோண்டப்பட்ட குழிகளில் மண் அள்ளி போடப்பட்டு வருகிறது. செப்.30-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில், பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் குழிகள் மூடப்பட்டு வருவதாக தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆராய்ச்சியில், பண்டைய தமிழர்களின் ஆயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கடும் எதிர்ப்பை மீறி அகழ்வாராய்ச்சி தலைவராக ஸ்ரீராம் பதவியேற்ற பின்னர், 3-ஆம் கட்ட ஆய்வில் பொருட்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறி, ஆராய்ச்சிக்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.