நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இசக்கி முத்துவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே, காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி இசக்கிமுத்து. இவர், கடந்த 23-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தன் குடும்பத்துடன் வந்தார். திடீரென, தான் ஏற்கனவே கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தனது உடலிலும், தன் மனைவி சுப்புலட்சுமி உடலிலும், இரு பெண் குழந்தைகள் மதி சரண்யா, அட்சய பரணிதா ஆகியோர் உடலிலும் ஊற்றி தீயை பற்ற வைத்தார்.
இசக்கிமுத்து, சுப்புலட்சுமி தம்பதியர்
உடனடியாக, அங்கிருந்தவர்கள் நால்வரது உடலிலும் தண்ணீரையும் மண்ணையும் ஊற்றி தீயை அணைக்க முயன்றானர். இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சுப்புலட்சுமி, இரு பெண் குழந்தைகளும் அன்றைய தினமே உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், இசக்கிமுத்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
திருநெல்வேலியில் பலியான சரண்யா
இதையடுத்து, போலீஸார் விசாரணையில் அவர்கள் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக, காசிதர்மத்தை சேந்த தளவாய்ராஜ், அவரது மனைவி, முத்துலெட்சுமி, தளவாய்ராஜின் தந்தை காளி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
அட்சய பரணிதா
இந்நிலையில், இரண்டு நாட்கள் கழித்து, புதன்கிழமை இசக்கி முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது தம்பி கோபி உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர், மருத்துவமனை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கந்துவட்டி தொடர்பாக காவல் துறை தவறான தகவல்களை அளிப்பதாக, கோபி குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே, கந்துவட்டி புகார்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: ”கடனை திருப்பி கொடுக்க முடியாவிட்டால், எதற்கு உயிருடன் இருக்கிறாய்?”: இசக்கிமுத்துவை மிரட்டிய போலீஸ்?