தமிழகத்தில் எல்.இ.டி. பல்புகள் வாங்கியதில் 403 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்ட அறிக்கை வருமாறு..
தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிற அ.தி.மு.க.வின் பதவி காலம் நித்திய கண்டம் பூரண ஆயுசாக மாறி வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தங்களது ஊழல் நடவடிக்கைகளை அனைத்து துறைகளிலும் நீக்கமற செய்து வருகிறார்கள். இதனால் ஊழல் தலைவிரித்தாடி வருகிறது.
உட்கட்சி பூசல்களுக்கு ஊடகங்களில் அதிகளவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதால் பல்வேறு துறைகளில் நடைபெறுகிற ஊழல் வெளிச்சத்திற்கு வராமல் மூடி மறைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவற்றையும் மீறி சில ஊழல்கள் வெளியே வருகிற சூழல் ஏற்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்.இ.டி. பல்புகள் கொள்முதல் செய்தததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. அதன்படி எல்.இ.டி. பல்பு சந்தை மதிப்பில் குறைந்தபட்ச விலையாக ரூபாய் 1450 முதல் ரூ.2125 வரை கிடைக்கிறது. ஆனால் அரசின் கொள்முதல் விலை ரூபாய் 3735 முதல் ரூபாய் 4125 என மாவட்டத்திற்கு மாவட்டம் விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தக்காரர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
சராசரி சந்தை மதிப்பை விட கூடுதலாக ரூபாய் 2000 கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. அரசாணைப்படி 24 லட்சம் பல்புகள் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 862 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. சராசரி கொள்முதல் விலை ரூபாய் 1990 வீதம் கொள்முதல் செய்திருந்தால் ரூபாய் 459 கோடி மட்டுமே செலவாகும். ஆனால் அரசு நிர்ணயித்துள்ள விலைப்படி கூடுதலாக ரூபாய் 403 கோடி செலவாகிற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதில் பெரும் தொகை சம்மந்தப்பட்டவர்களுக்கு கைமாறியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொகை அனைத்தும் ஊராட்சி பொது நிதியிலிருந்து ஈடு செய்யப்பட வேண்டுமென வழிகாட்டும் அறிக்கை கூறுகிறது. ஏற்கனவே ஊராட்சிகளின் நிதிநிலைமை சரியில்லாத காரணத்தால் நடைமுறை செலவுகளைக் கூட செய்ய முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிற நிலையில் இத்தகைய கூடுதல் பளுவை தமிழக ஆட்சியாளர்கள் சுமத்துவது மிகவும் கண்டனத்திற்குரியது.
கிராமப்புறங்களில் கழிப்பறைகளுக்கான கதவுகள், மேற்கூரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதிலும் ஊழல்கள் நடந்துள்ளன. அதேபோல, ஐந்தாண்டு திட்டம் தயாரிப்பு பயிற்சிக்கான பைகள் மற்றும் உபகரணங்கள் ஒருசில குறிப்பிட்ட நபர்களிடமே மத்திய தொகுப்பாக கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை என்பது ஊழல் வளர்ச்சித் துறையாக நாளுக்கு நாள் மாறி வருவதைக் கண்டு அரசு ஊழியர்கள் கடும் கொந்தளிப்பான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கிற எஸ்.பி. வேலுமணி இத்தகைய ஊழல்களில் பெரும் பங்கு வகித்து வருகிறார் என்கிற பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அல்லது மேதகு ஆளுநர் இப்பிரச்சினையில் தலையிட்டு உயர்மட்ட விசாரணைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோருகிறேன்.
இவ்வாறு கூறியிருக்கிறார்.