/indian-express-tamil/media/media_files/2025/10/13/karur-stampede-cbi-investigation-2025-10-13-12-16-27.jpg)
'நியாயமான விசாரணைக்குத் தகுதியானது'... கரூர் கூட்டநெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்
கரூரில் கடந்த மாதம் 27- ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசல் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ரோடு ஷோ'-வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதேபோல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவன் பிருத்திக்கின் தந்தை பன்னீர்செல்வம், பாத்திமாபானு கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோரும் சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்கக்கோரியும் பா.ஜ.க மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுக்கள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் இந்தச் சம்பவம், நாட்டின் மனசாட்சியை உலுக்கி உள்ளது. எனவே, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு இது தகுதியானது. இதன் காரணமாக, ஒரு நியாயமான விசாரணையை உறுதி செய்ய, தற்காலிக நடவடிக்கையாக, விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.
விசாரணையைக் கண்காணிக்க 3 பேர் குழு அமைப்பு
விசாரணையின் பாரபட்சமற்ற தன்மை குறித்து கட்சிகள் எழுப்பிய கவலைகளைத் தணிக்கும் விதமாக, சி.பி.ஐ விசாரணையை கண்காணிக்க, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவை நீதிமன்றம் அமைத்தது. நீதிபதி ரஸ்தோகி, இந்தக் குழுவில் மற்ற உறுப்பினர்களாக 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாமல், தமிழ்நாட்டுக் காவல்துறையில் பணிபுரிபவர்களாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சி.பி.ஐ-யின் விசாரணையை மேற்பார்வையிடும், உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், சிபிஐ சேகரிக்கும் ஆதாரங்களை மறு ஆய்வு செய்யவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ அதிகாரிகள் தங்கள் விசாரணை அறிக்கையை இந்தக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஐகோர்ட் அணுகுமுறையில் சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
அரசியல் பேரணிகளுக்கான நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) வகுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைக்குமாறு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் (சென்னை அமர்வு) அணுகுமுறையை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
அரசியல் பேரணிகளுக்கு நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) கோரும் ரிட் மனு கிரிமினல் ரிட் மனுவாக எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரலிடம் உச்ச நீதிமன்றம் அறிக்கை கோரியுள்ளது. மேலும், SOP கோரும் அந்த மனுவை வேறு அமர்வுக்கு மாற்றும்படி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கரூர் சம்பவம் மதுரை அமர்வின் எல்லைக்குள் வரும்போது, தலைமை நீதிபதியின் குறிப்பிட்ட அங்கீகாரம் இல்லாமல் சென்னை அமர்வு இந்த வழக்கை விசாரித்திருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. சென்னை அமர்வு அந்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இந்த இடைக்கால உத்தரவை த.வெ.க. மற்றும் மற்ற கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு பிறப்பித்தது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்
த.வெ.க பொதுச்செயலாளர் ஆதாவு அர்ஜுனா மூலம் தாக்கல் செய்த மனுவில், கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்கத் தமிழ்நாடு காவல் அதிகாரிகளை மட்டுமே கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் அக்டோபர் 3ஆம் தேதி உத்தரவை எதிர்த்தது. மேலும், த.வெ.க. மற்றும் நடிகர் விஜய் குறித்து உயர் நீதிமன்றம் தெரிவித்த பாதகமான கருத்துக்களுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்தக் கட்சி கோரியது. சிபிஐ விசாரணைக்கு மாற்ற மறுத்த மதுரை உயர்நீதிமன்ற அமர்வின் அக்.3ஆம் தேதி உத்தரவையும் மற்ற மனுக்கள் எதிர்த்தன.
நீதிபதிகளின் அடுக்கடுக்கான கேள்விகள்
விசாரணையின்போது உச்ச நீதிமன்ற அமர்வு சில கேள்விகளை எழுப்பியது. அரசியல் பேரணிகளுக்கான நிலையான இயக்க நடைமுறையைக் கோரும் ஒரு மனுவில் SIT விசாரணைக்கு எவ்வாறு உத்தரவிடப்பட்டது? கரூர் சம்பவம் மதுரை அமர்வின் அதிகார வரம்பிற்குள் வரும்போது, சென்னை அமர்வு எவ்வாறு உத்தரவுகளைப் பிறப்பித்தது? இதே இடத்தில் நெரிசல் காரணமாக அதிமுக பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டபோது, த.வெ.கவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது ஏன்? நள்ளிரவில் 30 முதல் 40 உடல்களுக்குப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அதிகாலை 4 மணிக்கெல்லாம் உடல்கள் தகனம் செய்யப்பட்டது எப்படி என்றும் அடுக்ககடுக்கான கேள்விகளை எழுப்பி இருந்தது. தமிழக அரசு தனது எதிர் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய 8 வார கால அவகாசம் வழங்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.