Coimbatore News : கோவையில் கோலாகலமாக துவங்கியது யானைகள் புத்துணர்வு முகாம். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளுக்கு 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடைபெறும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி அன்று இந்த முகாம் துவங்கியது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீநிவாசன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் இந்த விழாவை துவங்கி வைத்து யானைகளுக்கு கரும்பு மற்றும் பழங்களை வழங்கினர்.
கோவிலில் இருக்கும் யானைகள் தனியாக தங்களின் நாட்களை கழிப்பதால், தங்கள் தோழிகளுடன் காடுகளுக்குள் உலாவரவும், ஆற்றில் குளித்து புத்துணர்ச்சியுடன் இருக்கவும் அதற்கு இருக்கும் ”ஸ்ட்ரெஸ்ஸினை” குறைக்கவும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த முகாமை அமைத்தார்.
இந்த ஆண்டு 9வது முறையாக புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி என்ற கிராமத்தில் நடைபெறும் இந்த முகாமில் நம் அனைவருக்கும் நன்கு பரீட்சையமான பாப்-கட் செங்கமலம் உள்ளிட்ட 26 கோவில் யானைகள் பங்கேற்றன. இந்த யானைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளே செய்து தரப்பட்டுள்ளது. காலையில் எழுந்து வாக்கிங் சென்று, குளித்து ரெஃப்ரெஷாக இனி 48 நாட்கள் இந்த முகாமில் யானைகள் மகிழ்ச்சியாக உலாவரும்.
ராமேஸ்வரத்தில் இருந்து வந்த ராமலெட்சுமியின் யானைப்பாகன் கூறுகையில், இந்த யானை 5 வயதில் அசாம் மாநிலத்தில் இருந்து பிடித்து வரப்பட்டது என்றும், தற்போது 18 வயதாகிறது. இந்த முகாமில் வந்து கல்யாணி என்ற யானையுடன் நட்பாகிவிட்டது. எனவே ஒவ்வொரு முறையும் இந்த முகாமிற்கு வந்த பிறகு ராமலெட்சுமியை கல்யாணியின் அருகே நிற்க வைக்கின்றோம் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க : இன்று விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை – பத்ம ஸ்ரீ ரங்கம்மாள்!
இந்த முகாமிற்காக ரூ. 1.67 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன. கொரோனா நோய்த்தொற்று காலம் என்பதால் குறைவிலான எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் யானைகளுக்காக தனித்தனி வசிப்பிடம், குளிப்பதற்கு தேவையான வசதிகள், நடைபயிற்சிக்காக தனித்தனி பாதைகள், உணவுக்கூடாரம், முகாமைச் சுற்றிலும் சோலார் மின்சார வேலி மற்றும் கண்காணிப்பு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.