தீபாவளி பண்டிகையின் போது மக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் 4,820 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து புறப்படும் பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தீபாவளி சிறப்பு பேருந்துகளை இயக்க சென்னையில் 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட நினைப்பவர்களுக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயண நேரமும் வீணாகிறது. இதனையடுத்து கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டு 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், அண்ணா நகர் மேற்கு, பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய ஐந்து இடங்களில் இந்த பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செங்குன்றம் வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் அண்ணா நகர் மேற்கில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம், வி்க்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.
வேலூர், தரும்புரி போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.
தென்மாவட்டங்கள் இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் தேதி உள்ளிட்ட இதர விவரங்களை, அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்கும் போது தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.