கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள சக்தி நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பாலக்காட்டில் வருமானவரித் துறையின் துணை ஆணையராக பணியாற்றிவரும் கண்ணன் என்பவர் குடியிருந்து வருகிறார்.
இவர், நேற்று காலை குடும்பத்துடன் சென்னை புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த நிலையில் ஆளில்லா வீட்டை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீடு புகுந்து 50 சவரன் நகையை கொள்ளையடித்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன், வடவள்ளி காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, உள்ளிட்டவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே
வருமானவரித்துறை அதிகாரி கண்ணனும் வீட்டிற்கு வந்து சுமார் 50 சவரன் நகை கொள்ளை போனதை உறுதி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போலிசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“