தமிழகத்தில் இன்று 6 மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த திங்கட்கிழமை பலத்த மழை பெய்தது. சென்னையில் நேற்று முன் தினம் நள்ளிரவுக்கு பிறகு மழை பலமாக இருந்தது. காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பிற கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
சென்னையில் நேற்று அதிகாலை வரை மழை நீடித்தது. பின்னர் காலையில் சற்று ஓய்ந்திருந்த மழை, 10 மணிக்கு பிறகு மீண்டும் பெய்ய தொடங்கியது. அதன்பிறகு தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சென்னை மாநகர சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை மழை பெய்தது. நாகை மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. தஞ்சாவூரில் நேற்று காலை சிறிது நேரம் மழை பெய்தது. அதன்பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதற்கிடையே தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. தொடர் மழை காரணமாக இன்று காலை 7 மணி நிலவரப்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், நெல்லை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகளை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.