ஏப்ரல் 17-ஆம் தேதி எடுத்த ஒருமித்த முடிவின்படி, தினகரன் கட்சியில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். நாங்கள் யாரும் அவர்களுடன் தொடர்பில் இருக்க மாட்டோம். இதில் சந்தேகம் வேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், அமைச்சர்கள் குழு இன்று செய்தியாளர்களை சந்தித்து தெளிவுப்படுத்தியது.
இதுகுறித்து, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த தினகரன் அளித்த பேட்டியில், "என்னைக் கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எப்படி வந்தது? நான் கட்சியின் பொதுச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினேன். அவர் இன்னும் 60 நாட்கள் இ.பி.எஸ். அணிக்கு நேரம் கொடுப்போம் என்று கூறினார். அதற்குள் அவர்கள் சொன்னது போல் கட்சியை ஒருங்கிணைத்துவிட்டால் நல்லது. இல்லாவிடில் என்ன செய்யவேண்டும் என பொதுச் செயலாளர் அறிவுறுத்தியிருக்கிறார். அதன்படி நாங்கள் செயல்படுவோம்" என்று கூறியுள்ளார்.