ஓய்வூதியம், நிலுவைத்தொகை உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில், முழுமையாக பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஸ்டிரைக் குறித்து சென்னையின் நிலையை ஆய்வு செய்வதற்காக வந்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்த போது, "தமிழ்நாடு முழுவதும் தற்போது 75 சதவிகிதம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளை, 100 சதவீதம் முழுமையாக பேருந்துகளை இயக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலுவைத் தொகை, போக்குவரத்து ஊழியர்களின் கணக்கில் சேர்க்கப்படும். அதன்படி, நாளை மறுநாள் ரூ.495 கோடி வழங்கப்படும்.
மேலும், தினக்கூலி அடிப்படையில் டிரைவர்களை தற்போது தேர்வு செய்து வருகிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்று பணி செய்ய வரும் இந்த டிரைவர்களுக்கு, பிற்காலத்தில் அரசு பணி சேர்க்கையின் போது முன்னுரிமை வழங்கப்படும். 37 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. எனவே, வேலை நிறுத்தத்தை கைவிட்டு போக்குவரத்து பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்" என்றார்.
இந்நிலையில், பேருந்துகள் தட்டுப்பாட்டால் பல தனியார் பேருந்து நிறுவனங்கள், டிக்கெட் விலையை கடுமையாக ஏற்றியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.