7-வது ஊதியக் குழு பரிந்துரை தொடர்பான அதிகாரிகள் குழு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்தப் பரிந்துரைகள் விரைவில் அமலாகும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன் தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்தார்.
இக்குழுவில் கூடுதல் தலைமை செயலாளர், நிதித்துறை முதன்மை செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை உமாநாத், உறுப்பினர் செயலாளர் ஆகியோர் உறுப்பினர்கள்! மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க இவர்களை அரசு கேட்டுக் கொண்டது.
இக்குழுவின் அதிகாரங்கள் கீழ்வருமாறு வரையறுக்கப்பட்டது.
மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க வேண்டும். இதர படிகள் தொடர்பாக மத்திய அரசுஅமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரியபரிந்துரைகளை வழங்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம். ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.06.2017-க்குள் அரசிற்கு அளிக்கும் என்று பிப்.22-ம் தேதி முதல்வர் அறிவித்தார்.
அரசு அலுவலர்களின் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள், அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் ஆகியவற்றின் கருத்துகளை அந்தக் குழு கேட்டது. ஆனால் அதுதொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு, இதுவரை அரசுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே மேலும் 3 மாதங்களுக்கு 30.9.17 வரை நீட்டிக்க அரசு ஆணையிட்டது. இக்குழு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்டது. நான்கு கட்டமாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
ஊழியர்களின் கோரிக்கைகளை தீவிரமாக பரிசீலித்து ஊதியக்குழு செப்டம்பர் 27-ம் தேதி (நேற்று) முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்துரைகளை நிதித்துறை செயலாளர் சண்முகம் வழங்கினார். இதன் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஓய்வூதியம் உள்பட பல்வேறு சலுகைகள் ஊதியக்குழு பரிந்துரையில் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook