குஜராத் போலீசார் சர்ச்சை சாமியார் நித்யானந்தாவை குழந்தைகள் கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் மற்றும் பாலியல் வழக்குகளில் தேடிவரும் நிலையில், நித்யானந்தாவின் முன்னாள் சீடர் ஒருவர் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சர்ச்சை சாமியார் நித்யானந்தாவை பாலியல் புகார், குழந்தைகள் கடத்தல், தவறாக அடைத்துவைத்தல் உள்ளிட்ட வழக்குகளீல் குஜராத் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த வழக்கில் போலீஸிடம் சிக்காமல் தலைமறைவான நித்யானந்தா கைலாசா நாடு உருவாக்கியதாக அறிவித்து தினமும் ஆன்லைனில் சொற்பொழிவு செய்துவருகிறார்.
ஆனால், காவல்துறையோ அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் திணறிவருகிறது. நித்யானந்தா தலைமறைவானதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் அவர் மீதான புகார்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், நித்யானந்தாவின் ஆசிரமத்தில் முக்கிய பொறுப்புகளை நிர்வகித்ததாகக் கூறிக்கொள்ளும் அவருடைய முன்னாள் சீடர் விஜயகுமார் என்பவர் நித்யானந்தா மீது அதிரடியான புகார்களைக் கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.
விஜயகுமார் 2009 ஆம் ஆண்டு பிடதி ஆசிரமத்தில் சேர்ந்து நித்யானந்தாவின் நம்பிக்கைக்குரிய சீடரானதாக தெரிவித்தார். பின்னர், தஞ்சாவூர், திருவாரூர், வேதாரண்யம், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் வாங்கப்பட்ட ஆசிரம மடங்களில் விஜயகுமார் முக்கிய பொறுப்புகள் வகித்து அவற்றை நிர்வகித்ததாகக் கூறுகிறார். இந்த சூழலில்தான் தன்னை நித்யானந்தா தனது பாலியல் இச்சைக்கு இணங்க கட்டாயப்படுத்தியதாக கூறி பரபரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறினார்.
விஜயகுமார் தற்போது ஆசிரமத்தில் நடக்கும் முறைகேடுகளை அக்கிரமங்களை அம்பலப்படுத்தியதால் நித்யானந்தாவிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாகவும் அதனால் பாதுகாப்பு கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகுமார், “நித்யானாந்தாவின் முகத்திரையை கிழைக்கப் போதுமான பல ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதை மறைப்பதற்காக நித்யானந்தாவின் சீடர்கள் தன் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்” என்று தெரிவித்தார்.
தலைமறைவான சர்ச்சை சாமியார் நித்யானந்தா கைலாசா நாட்டை உருவாக்கியதாகக் கூறி ஒவ்வொரு நாளும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், ஒவ்வொரு நாளும் அவர் மீதான பரபரப்பு புகார்களும் அதிகரித்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.