சென்னையில் மாற்றுத்திறனாளியை அந்தத்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆசிஷ்குமாரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகோப்போர் உரிமைகளுக்கான சங்கத் தலைவர் ஜான்சிராணி, பொதுச்செயலாளர் நம்புராஜன், பொருளாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ள மனு :
சென்னையில் கை வண்டி இழுக்கும் கூலி தொழில் செய்து வந்தவர் ஆர். தங்கவேல்(67). இவரது மனைவி பார்வதி(60). இந்த தம்பதியரின் மகன் டி.ஆனந்(32). கடும் மனவளர்ச்சி பாதிப்பும், அமைதியின்மையுடன் கூடிய செயல்பாடும் உடையவர்.
இவர்களுக்கு சொந்த வீடு இல்லை. எந்நேரமும் ஆனந்த் சத்தம் போடுவதாலும், ரகளை செய்வதாலும் நிரந்தரமாக யாரும் வாடகைக்குகூட வீடு தருவதில்லை. அவ்வப்போது வீடு மாறுவதால், இவர்களுக்கு நிரந்தர முகவரி ஏதும் இல்லை. தற்போது சென்னையை அடுத்த மாங்காட்டில் குடியிருந்து வருகின்றனர்.
தொடர்ந்து அலைந்தும் ஆனந்திற்கு அரசு உதவித்தொகை கிடைக்காததால் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகோப்போர் உரிமைகளுக்கான சங்க வழிகாட்டுதல்படி 2 ஆண்டுகளுக்கு முன்பு அயனாவரத்தில் குடியிருந்த முகவரியிலிருந்து சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலருக்கு பதிவு தபால் மூலம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த மனு மீது சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளி அதிகாரி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து தலைமை செயலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி நலத்துறை செயலரிடம் 19.05.2017அன்று எமது சங்கத்தின் சார்பில் நேரடியாக புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அயனாவரம் வீட்டை காலி செய்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட மாங்காட்டில் ஆனந்தின் குடும்பம் குடியிருப்பதை காரணம் காட்டி, உதவித்தொகை தர மறுத்து காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரியை தொடர்புகொள்ள வேண்டுமென சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளி அதிகாரி தற்போதும் அலைக்கழித்துள்ளார். ஆனால் குடும்ப அட்டை, வங்கி கணக்கு எல்லாம் அயனாவரம் முகவரியிலேயே தற்போதும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனந்தின் தந்தை 2015 ஆம் ஆண்டு விண்ணப்பம் அளித்தபோதே சென்னை மாவட்ட அதிகாரி நடவடிக்கை எடுத்திருந்தால், கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஆனந்திற்கு அரசின் குறைந்தபட்ச உதவித்தொகையாவது கிடைத்திருக்கும். பொறுப்பற்ற முறையிலும் மனசாட்சி இல்லாமலும் இருந்த மாவட்ட அதிகாரியால் அக்குடும்பம் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி உள்ளது. பொறுப்பற்ற அந்த அதிகாரிக்கு தற்போது உதவி இயக்குநர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதும் வேதனைக்குறியது.
எனவே ஆனந்தை பாதுகாக்க மாதாந்திர உதவித்தொகை உடன் வழங்குவதுடன் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு ஒன்றையும் வழங்க முதலமைச்சர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க எமது சங்கம் வலியுறுத்தி கோருகிறது. பொறுப்பற்ற சம்பந்தப்பட்ட முன்னாள் மாவட்ட அதிகாரி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க எமது சங்கம் வலியுறுத்துகிறது.
இதில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளியை வருகிற 26-ம் தேதி ஐ.ஏ.எஸ். அதிகாரியான மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு கூறியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையராக ஆசிஷ்குமார் ஐ.ஏ.எஸ். பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.