பாலாபிஷேகத்திற்கு எதிராக நீண்ட யுத்தம் : சூப்பர் ஸ்டார் செய்ய மறந்ததை ‘தல’ செய்வாரா?

‘கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் வேண்டாம். இந்த விஷயத்தில் சூப்பர் ஸ்டார் செய்ய மறந்ததை, ‘தல’ செய்வாரா?’ என கேள்வியெழுப்பியிருக்கிறார்கள், பால் முகவர்கள்.

‘கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய அனுமதிக்க வேண்டாம். இந்த விஷயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்ய மறந்ததை, ‘தல’ அஜித் செய்வாரா?’ என கேள்வியெழுப்பி அஜித்துக்கு 3 பக்க கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

‘அல்டிமேட் ஸ்டார்’, ‘தல’ ஆகிய அடைமொழிக்கு சொந்தக்காரரான அஜித்குமார் நடிப்பில் தயாராகியிருக்கும், ‘விவேகம்’ வெகு விரைவில் ரிலீஸாக இருக்கிறது.‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 3-வது படம் இது! இந்தி நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக இதில் தோன்றுவது ஸ்பெஷல்! கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், காஜல் அகர்வால் என இரு நாயகிகள் இடம் பெற்றிருக்கிறார்கள். ‘தல’ ரசிகர்கள் இந்தப் படத்திற்காக ‘பல்ஸ்’ எகிற காத்திருக்கும் சூழலில், பால் முகவர்கள் சங்கம் சார்பில் வித்தியாசமானதும், ‘விவேகமா’னதுமான ஒரு கோரிக்கையை முன் வைக்கிறார்கள்.

என்ன கோரிக்கை அது? இதோ, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமியின் வார்த்தைகளிலேயே அதை பார்ப்போம். ‘முன்னணி நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் வெளியாகும் போது அவர்களின் கட்அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்கின்ற கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதற்குப் பதிலாக முன்னணி நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்க வளாகங்களில் முதல் 10 நாட்களுக்கு இரத்ததான முகாம், உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம், மது, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடத்தி ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்தலாம்.

‘கபாலி’ ரஜினி

இந்த கோரிக்கைகளை கடந்த 2016-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் முன்னெடுக்கத் தொடங்கினோம். ஏனெனில் நமது இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களாலும், பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கும் என ஒவ்வொரு 2 வினாடிகளுக்கும் எவருக்கேனும் ஒருவருக்கு இரத்தம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் இரத்ததானம் குறித்த போதிய விழிப்புணர்வு நம்மிடையே இன்னும் ஏற்படாததால் நாள் ஒன்றுக்கு சுமார் 4கோடி யூனிட் இரத்தம் தேவைப்படும் சூழ்நிலையில் வெறும் 45லட்சம் யூனிட் இரத்தம் மட்டுமே தானமாக கிடைப்பதாக மருத்துவத்துறை தெரிவிக்கிறது.

இதன் காரணமாக நிறைய உயிர்களை காப்பாற்ற முடியாமல் மருத்துவ உலகம் திணறி வருகிறது. மேலும் அரசுக்கு வருவாய் வருகிறது என்பதற்காக புகையிலை பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி அளிப்பதோடு மட்டுமின்றி மது விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை உற்பத்தி செய்கின்ற ஆட்சியாக மத்திய, மாநில அரசுகள் இருக்கின்றன. அதனால் மது, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதனை சாதாரண சாமான்ய மக்களில் ஒருவர் சொன்னால் எடுபடாது என்பதால் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் முன்னெடுத்துச் சென்றால் சரியாக இருக்கும் என நினைத்தோம்.

சிவாவுடன் ‘தல’

அதன் முதற்கட்டமாக கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி திரைப்படம் வெளியாக இருந்ததால் முதலில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்ற தலைமை நிர்வாகிகளான சுதாகர் மற்றும் சத்தியநாராயணா ஆகியோரை கடந்த 06.07.2016 அன்று சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேரில் சந்தித்து எங்களது கோரிக்கைகளை விவரித்து கடிதத்தை வழங்கினோம். அத்துடன் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு ஊடகங்கள் வாயிலாக அறிக்கை வெளியிட கேட்டுக் கொண்டோம்.

அப்போது பேசிய ரசிகர் மன்ற நிர்வாகிகள் அமெரிக்காவில் ஓய்வில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்று ஓரிரு நாட்களில் நல்லதொரு அறிவிப்பை வெளியிடுகிறோம் என வாய்மொழியாக தெரிவித்தனர். நாட்கள் கடந்தன, கபாலி திரைப்படமும் வெளியானது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் வழக்கம் போல் மெளன சாமியாராகவே இருந்து விட்டார்.

காஜல்

இருப்பினும் நாங்கள் அத்துடன் நின்று விடாமல் மேற்கண்ட அதே கோரிக்கைகளை அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்கிற அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை கடந்த 20.07.2016 அன்று அவர்களது அலுவலகத்தில் சந்தித்து வழங்கினோம். அப்போது எங்களது கோரிக்கைகளை நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் முன் வைத்து விவாதித்து அதன் பிறகு முடிவை தெரிவிக்கிறோம் என்றனர்.

அவர்கள் சொன்னது போல் கடந்த 14.08.2016 அன்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் எங்களது சங்கத்தின் கோரிக்கைகளை முன் வைத்து விவாதம் நடத்திய பிறகு அதன் சாரம்சத்தை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் அனுப்பி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் விபரத்தை பொதுச்செயலாளர் விஷால் கையொப்பமிட்ட கடந்த 19.08.2016 தேதியிட்ட கடிதம் வாயிலாக எங்களுக்கு தெரிவித்தனர்.

லட்சக்கணக்கான ரசிகர்களையும், ரசிகர் மன்றங்களையும் கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்தோ அல்லது வேறு எந்த ஒரு நடிகர், நடிகைகளோ எங்களது கோரிக்கை குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்புகளும் வெளியிடவில்லை. ஆனால் எங்களது சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து கேள்விப்பட்ட தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கடந்த 2016-ம் ஆண்டு தனது நடிப்பில் ‘ஜனதா கேரேஜ்’ திரைப்படம் வெளியாக இருந்த சூழ்நிலையில் தனது ரசிகர்கள் எவரும் தன்னுடைய கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யக் கூடாது என்கிற அறிவிப்பினை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டார்.

அக்‌ஷரா ஹாசன்

மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை தமிழக நடிகர்களே புறக்கணித்த போது அண்டை மாநிலத்தை சேர்ந்த நடிகர் ஒருவர் அதில் ஒரு பகுதியையாவது செயல்படுத்திட முன் வந்தது ஓரளவிற்கு மன நிறைவை தந்தது. இந்த சூழ்நிலையில் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் திரைப்படம் இந்த (ஆகஸ்ட்) மாத இறுதியில் வெளியாக இருப்பதால் மேற்கண்ட கோரிக்கைகளை நடிகர் அஜீத்குமார் கவனத்திற்கு நேரில் கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் அவருக்கு ரசிகர் மன்றங்கள் இல்லை என்பதை காரணம் காட்டி நேரில் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.

அவருக்கு ரசிகர் மன்றங்கள் இல்லையென்றாலும் கூட அவரின் செயல்பாடுகளை அப்படியே பின்பற்றுகிற லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் எங்களது சங்கத்தின் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய 3 பக்க கடிதத்தை நேற்று (ஆகஸ்ட் 4) பதிவு தபால் வாயிலாக நடிகர் அஜீத்குமாருக்கு அனுப்பியுள்ளோம். நடிகர் ரஜினிகாந்த் செய்ய முன் வராத மக்கள் நலன் சார்ந்த விசயத்தில் நடிகர் அஜீத்குமார் நல்லதொரு அறிவிப்பை வெளியிட்டு தனது ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளைச் செய்ய வைத்திட முன் வர வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் பொன்னுசாமி.

‘தல’ என்ன செய்யப் போகிறார்? என பொறுத்திருந்து பார்ப்போம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close