தமிழகத்தின் கடன் உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகளால் துயரங்களுக்கு ஆளாகியவர்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட வழக்கம் ‘மொய் விருந்து’. யார் கடனால் பாதிக்கப்பட்டிருக்கிறாரோ, அவர் தன் ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து விருந்து வைப்பார். விருந்து முடிந்த பின்பு, வந்தவர்கள் தங்களால் முடிந்த பண உதவியை செய்வர். இதே முறையில், தமிழகத்தில் வறட்சி மற்றும் விவசாயக் கடனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் அமெரிக்க வாழ் தமிழர்கள் வாஷிங்டனில் ‘மொய் விருந்து’ நடத்தினர்.
இந்த மொய் விருந்தை ’எய்ம்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு சனிக்கிழமை நடத்தியது. இந்த எண்ணத்தை அமெரிக்க தமிழ் சங்கம் மற்றும் அங்குள்ள தமிழ் பள்ளிகள் தான் ஆரம்பத்தில் முன்வைத்தன. இந்த மொய் விருந்தின் மூலம் கிடைத்த நிதியை தமிழகத்தில் நீர்நிலைகலை மீட்டெடுக்கவும், விவசாயத்தைக் காக்கவும் பயன்படுத்த உள்ளனர்.
இந்த ‘மொய் விருந்து’ நிகழ்ச்சியை தமிழ் கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில் பல சிறப்பு அம்சங்களுடன் கொண்டாடினர். சிறுதானிய உணவுகள், தமிழ் விளையாட்டுகளான பம்பரம், பல்லாங்குழி, நாட்டுப்புற கலைகள் ஆகியவையும் அந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தன.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுள் ஒருவரான மகேந்திரன் பெரியசாமி என்பவர் இதுகுறித்து கூறுகையில், “நாங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்காக அமெரிக்காவில் சில பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளோம். குறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தை பெருமளவில் நடத்தினோம். அப்படியிருக்கையில், தமிழ்நாட்டில் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதை நாங்கள் அறிந்தோம். அதிலிருந்து அவர்களை மீட்டெடுத்து அவர்களது நல்வாழ்விற்காக இந்த மொய் விருந்தை நடத்தியுள்ளோம்”, என கூறினார்.
மேலும், “இந்த நிகழ்ச்சிக்காக 1,200 பேர் எங்களுடைய இணையத்தளத்தில் பதிவு செய்திருந்தனர். இந்த நிகழ்வை தமிழ் கலாச்சாரம், உணவு, பண்பாடு ஆகியவற்றை இளம் தலைமுறையினருக்கு தெரியப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக கருதினோம். பின்னணி பாடகர் தேவன் ஏகாம்பரம் இந்த நிகழ்ச்சியில் பாடியது சிறப்பாக அமைந்தது.”, என மகேந்திரன் பெரியசாமி தெரிவித்தார்.
இதன் மூலம் திரட்டப்பட்ட நிதி ’எய்ம்ஸ் இந்தியா’ அமைப்பின் மூலம் கடலூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர், அரியலூர் உட்பட பல மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளை மீட்க பயன்படுத்தப்பட உள்ளது. இந்த மொய் விருந்தின் மூலம் 58.7 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக மகேந்திரான் கூறினார்.