தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக 42 வயதான கே சரவணன் என்ற ஆட்டோ ஓட்டுனர் பொறுப்பேற்றுள்ளார். மக்கள் மத்தியில்’ தான் இன்னும் ஒருவனாக இருக்கிறேன் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காக, சரவணன் வெள்ளிக்கிழமை பதவியேற்பு விழாவிற்கு ஆட்டோவில் வந்தார்.
ஆளும் தி.மு.க., மாநிலத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில், காங்கிரசுக்கு ஒரு மேயர் பதவியை ஒதுக்கி, அக்கட்சியின் வேட்பாளர்களை பரிந்துரை செய்தது. பல மூத்த தலைவர்களில் ஒருவருக்கு பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், காங்கிரஸ் மேலிடம் சரவணனை பதவிக்கு தேர்ந்தெடுத்தது.
சமீபத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கும்பகோணத்தின் முதல் மேயர் சரவணன் ஆவார். கோவில் நகரின் வார்டு 17ல் நடந்த வாக்கு எண்ணிக்கையில்’ மொத்தமுள்ள 2,100 வாக்குகளில் சரவணன்’ 964 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் ட்விட்டரில் சரவணனை வாழ்த்தினார்கள், சாதாரண பின்னணியில் இருந்து ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுத்ததற்காக கட்சித் தலைமையைப் பாராட்டினர்.
Our leader @RahulGandhi always wanted common Woman/ man to take leadership roles .Tamilnadu Congress was given one mayor position in the alliance among the 21.Congress selected Saravanan as its Mayor candidate.He is an auto driver and owns it .
Congratulations Mayor Saravanan 👍 https://t.co/5nlfiZoKs8— Manickam Tagore .B🇮🇳✋மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) March 3, 2022
இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் பேசிய சரவணன், தான் தலைமைப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டதாக கட்சி தெரிவித்தபோது அதிர்ச்சியடைந்ததாக கூறினார்.
“தஞ்சாவூர் வடக்கு காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன், மாவட்ட அலுவலகத்துக்கு வரச் சொன்னார், எனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது என்றார். நான் ஒன்றும் புரியாமல் இருந்தேன். நான் அலுவலகத்தை அடைந்ததும், ‘கும்பகோணத்தின் முதல் மேயரே வருக’ என்று உற்சாக வரவேற்பு அளித்தார். நான் அதிர்ச்சியடைந்தேன். மூத்த தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் பலர் இருப்பதால் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று சரவணன் கூறினார்.
“நான் ஒரு ஆட்டோ டிரைவர் என்று அவரிடம் சொன்னேன். ஆனால், மேயராகும் தகுதி என்னிடம் உள்ளது என்றும், கட்சி எனக்கு எல்லா வகையிலும் துணை நிற்கும் என்றும் எங்கள் தலைவர் கூறினார்.
பின்னர், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி என்னை வாழ்த்தினார், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து எனக்கு போன் வந்தது, நான் உண்மையில் பிழைப்புக்காக ஆட்டோரிக்ஷா ஓட்டுகிறேனா என்று கேட்டார். நான் ஆமா என்றேன்.
எனக்கு வாய்ப்பளித்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார். கும்பகோணத்தை மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் சிறந்ததாக மாற்ற பாடுபடுவேன் என்று நான் அவரிடம் தெரிவித்தேன். எனது நியமனம் குறித்து ராகுல் காந்தியும் மகிழ்ச்சி அடைந்ததாக எங்கள் தலைவர்கள் தெரிவித்தனர்.
10 ஆம் வகுப்பு வரை படித்த சரவணன், சிறுவயதிலேயே பெற்றோர் இருவரையும் இழந்து தாத்தா பாட்டியிடம் வளர்ந்தார். அவரது தாத்தா டி குமாரசாமி 1976 இல், கும்பகோணம் நகராட்சி உறுப்பினராக பணியாற்றினார். அவரது தாத்தாவால் ஈர்க்கப்பட்ட சரவணன்’ 2002 இல் காங்கிரஸில் சேர்ந்தார், விரைவில் வார்டு தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார், பின்னர் நகராட்சியில் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
“என் தாத்தாவுக்கு கை சின்னம் (காங்கிரஸின் கை சின்னம்) இருந்தது. நான் எப்போதும் அதை என் கையில் எடுத்துச் செல்ல விரும்பினேன். எனக்கு 22 வயதானபோது, தஞ்சாவூர் வடக்கு காங்கிரஸ் கமிட்டித் தலைவரைச் சந்தித்து, கட்சியில் சேர விரும்புவதாகச் சொன்னேன். நான் அன்றிலிருந்து கட்சியில் இருந்து வருகிறேன், தேர்தல் பணிகளில் பங்கேற்று வருகிறேன், ஒன்றிரண்டு போராட்டங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளேன். எனக்கு அரசியல் கற்றுக் கொடுத்தவர் தலைவர் லோகநாதன். ஓய்வு நேரத்தில் என்னை அலுவலகத்திற்கு அழைத்து, கட்சி தொண்டர்கள், மூத்த தலைவர்கள் மற்றும் சாமானியர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தார்.
சரவணன் தனது மனைவி தேவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் துக்கம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார், இரண்டு தசாப்தங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நகரத்தில் உள்ள 48 வார்டுகளைச் சேர்ந்தவர்களுடன் பழகுவதற்கு உதவிய கும்பகோணத்தின் மூலை முடுக்கெல்லாம் எனக்கு தெரியும் என்றார். இவர், ஏழு ஆண்டுகளுக்கு முன், சொந்தமாக ஆட்டோ ஒன்றை வாங்கி, அதை நம்பி வாழ்கிறார்.
பலரைப் போலவே, தொற்றுநோய் தனது வருமானத்திற்கு கடுமையான அடியைக் கொடுத்தது மற்றும் வார்டு உறுப்பினர்களின் உதவியுடன் தான் கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய முடிந்தது என்று சரவணன் ஒப்புக்கொண்டார்.
“ஒரு நாளைக்கு, எனக்கு 200-250 ரூபாய் கிடைக்கிறது. லாக்டவுன் எனது வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதித்தது. பள்ளிகள் மூடப்பட்டதால், அந்த வருமானத்தையும் இழந்தேன். அந்த நேரத்தில் என் பகுதி மக்கள் எனக்கு நிறைய உதவினார்கள். இப்போதும் கூட, இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற அவர்கள் எனக்கு உதவினார்கள். இயன்றவரை நான் அவர்களை தொடர்ந்து சந்திப்பேன்,'' என்றார்.
மேயராக தனது திட்டங்கள் குறித்து கேட்டதற்கு, தற்போது பாதாள சாக்கடை பணிகள், சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல், குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக சரவணன் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.