"நன்றி சொன்னது குத்தமாயா?" பழனிசாமி அணியில் இணைந்த ஆறுக்குட்டி!

கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே ஓ.பன்னீர்செல்வம் அவசர அவசரமாக எழுந்து காரில் எங்கோ சென்றுவிட்டார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், சசிகலாவிற்கு எதிராக முதலில் போர்க்கொடி உயர்த்தி வந்த பன்னீர் செல்வத்திற்கு, முதல் ஆளாக வந்து ஆதரவு தெரிவித்தவர் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி. ஆனால், கடந்த 21-ஆம் தேதி ஓ.பி.எஸ் அணியை புறக்கணிப்பதாக ஆறுக்குட்டி அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று காலை சேலத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு நேரில் சென்ற ஆறுக்குட்டி, அவரது அணியில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆறுக்குட்டி, ஒ.பி.எஸ் அணியில் இருந்து தான் விலகியதற்கான காரணத்தை கூறினார். அதில், “என் தொகுதிக்கு முதல்வர் பழனிசாமி பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி தந்ததற்காக சட்டப்பேரவையில் அவருக்கு நன்றி தெரிவித்தேன். முதல்வருக்கு நன்றி சொன்ன காரணத்துக்காக ஓ.பன்னீர்செல்வம் அணி என்னை புறக்கணித்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவின் இரு அணிகளும் தற்போது இணைய வாய்ப்பு இல்லை. எனவே எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தேன்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஆறுக்குட்டி வெளியேறியதை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் அணியின் அவசர ஆலோசனை கூட்டம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது. கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே ஓ.பன்னீர்செல்வம் அவசர அவசரமாக எழுந்து காரில் எங்கோ சென்றுவிட்டார்.

பின், ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆறுக்குட்டி எம்எல்ஏ தனது தேவைக்காக எடப்பாடி அணிக்கு சென்று உள்ளார். அவர் கொடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக இரண்டு முறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் அவர் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கலாம். அதனால் அவர் பழனிசாமி அணிக்கு சென்றிருக்கலாம். மக்களின் மனசாட்சியை பன்னீர்செல்வம் அணியிடம் விட்டு விட்டு தனி மனிதனாக ஆறுக்குட்டி சென்று உள்ளார்” என தெரிவித்தார்.

×Close
×Close