இனி பத்து ரூபாய்க்கு குடும்பத்தோடு டீ குடிக்கலாம்: அமைச்சர் அறிவிப்பு

"நான் தனியார் பால் குறித்து தானே பேசக் கூடாது" என்று கூறுவது போல், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டப்பேரவையில் இன்று அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 24-ஆம் தேதி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “தமிழகத்தில் ஆவின் பால் தவிர, அனைத்து தனியார் நிறுவன பால் உற்பத்தியிலும், இறந்துபோனவர்களின் உடலைப் பதப்படுத்தும் ரசாயனம் கலக்கப்படுகிறது. இதனைக் குடித்தால் கேன்சர் வரும். இதனால் தான், இப்போதெல்லாம் நிறைய குழந்தைகளுக்கு கேன்சர் வருகிறது. உண்மையான பால் என்றால், 5 மணி நேரத்தில் கெட்டுப் போக வேண்டும். ஆனால், நாள்கணக்கில் கெடாமல் இருப்பதற்கு பெயர் பாலா? இதிலிருந்தே அது ரசாயனம் கலக்கப்பட்ட பால் என்று தெளிவாக தெரிகிறது” என்றார்.

தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சரே, இப்படி வெளிப்படையாக கூறியது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டு வருவதாக ஹட்சன், டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. மேலும், அமைச்சரின் இந்த பேச்சுக்கு நஷ்ட ஈடாக மூன்று நிறுவனங்களுக்கும் தலா 1 கோடி வீதம் ரூ.3 கோடி வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தன.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், உரிய ஆதாரங்கள் இன்றி, தனியார் பால் நிறுவன கலப்படம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக, 4 வாரத்தில் அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தது.

இந்தச் சூழ்நிலையில், “நான் தனியார் பால் குறித்து தானே பேசக் கூடாது” என்று கூறுவது போல், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டப்பேரவையில் இன்று அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பத்து ரூபாய்க்கு ஆவின் பால் பாக்கெட் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், 225 மில்லி லிட்டரில் இந்த 10 ரூபாய் பாக்கெட் தயாரிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இனி பத்து ரூபாய்க்கு குடும்பத்தோடு டீ குடிக்கலாம். விரைவில் இந்த பத்து ரூபாய் பாக்கெட்டுகள் கடைகளில் கிடைக்கும். இதில், 4.5% கொழுப்புச் சத்து, 8.5% இதர சத்துகளும் இருக்குமென தெரிவித்துள்ளார்.

மேலும், ரூ.30 லட்சம் செல்வில் தர்மபுரி பால்பண்ணைக்கு புதிய உபகரணங்கள் வாங்கப்படும்
என்றும், சென்னையில் 115 தானியங்கி பால் நிலையங்கள் பாலகங்களாக மாற்றப்படும் என்றும் கூறியுள்ளார். அதேபோல், ரூ.37 லட்சம் செலவில் பால் சோதனை உபகரணங்கள் வாங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

×Close
×Close