2025-க்குள் அப்துல் கலாம் கனவு கண்ட வளர்ச்சிமிக்க இந்தியாவை உருவாக்குவோம் என மணிமண்டபம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஒதுங்கியிருக்கும் மாவட்டம் ராமநாதபுரம். நவீன உலகம் தவிர்க்க முடியாத விஞ்ஞானி அப்துல் கலாமை தந்ததும் இந்த மாவட்டம்தான்! விஞ்ஞானியாக உச்சம் தொட்ட அப்துல் கலாம் ஜனாதிபதி பதவியேற்றதும் மக்களின் மனம் கவர்ந்தார். இளைஞர்களை உத்வேகப்படுத்துவதை தனது கடமையாக நினைத்து செய்தார்.
2015-ம் ஆண்டு இதே ஜூலை 27-ம் தேதி மறைந்த அந்த மாமேதைக்கு அவரது சொந்த ஊரில் மணி மண்டபம் எழுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம், பேக்கரும்பு என்ற இடத்தில் மூன்றரை ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கிக் கொடுத்தது. அந்த இடத்தில் சுமார் 15 கோடி ரூபாய் செலவில் கண்கவர் மணிமண்டபத்தை மத்திய அரசின் பாதுகாப்புத்துறை வளர்ச்சி நிறுவனம் கட்டி முடித்துள்ளது.
கலாம் உருவாக்கிய அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 750-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 90 ஓவியங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான இன்று(வியாழக்கிழமை) இந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மண்டபம் முகாமில் வந்து இறங்கினார். பிறகு கார் மூலமாக அப்துல் கலாம் மணி மண்டபம் அமைந்துள்ள பேக்கரும்பு வந்தார். அங்கு கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை மோடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து பகல் 11.30 மணியளவில் அப்துல் கலாம் மணிமண்டபத்தை திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மண்டபம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராமேசுவரம்-அயோத்தி இடையேயான புதிய ரெயில் சேவையையும், ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார் மோடி. விழாவில் கவர்னர் வித்யாசாகர்ராவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மேடையில் மோடியின் இருபுறமும் அமர்ந்திருந்தனர். மத்திய மந்திரிகள் நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார், துணை ஜனாதிபதி வேட்பாளரும் எம்.பி.யுமான வெங்கையா நாயுடு ஆகியோரும் மேடையில் அமர்ந்தனர்.
கலாம் நினைவிட குழுவில் இடம்பெற்றவர் என்ற அடிப்படையில் வெங்கையா வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசி முடித்ததும் மோடி சிறப்புரையாற்றினார். பகல் 1 மணிக்கு பேச ஆரம்பித்தார் மோடி. தனது பேச்சின் ஆரம்பத்தில், ‘நண்பர்களே வணக்கம்! இந்த புனித நகரமான ராமேஸ்வரத்திற்கு வந்ததை எனது பாக்கியமாக கருதுகிறேன்’ என தமிழில் பேசிவிட்டு இந்தியில் தொடர்ந்தார் மோடி. அவரது பேச்சை பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்தார்.
மோடி தொடர்ந்து பேசியதாவது : ‘அப்துல் கலாம் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் இந்த நினைவிடத்தை துரிதமாக கட்டி முடிக்க உறுதி வழங்கினேன். அதன்படி 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக காலத்தை உணர்ந்து செயலாற்றும் அரசு இது என்பது உணர்த்தப்பட்டிருக்கிறது. 125 கோடி மக்களுக்கும் எந்த மாதிரியான திட்டங்களை இந்த அரசு செய்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.
இந்த ராமநாதபுரம் பகுதி மீனவர்கள் எல்லையைக் கடந்து அண்டை நாட்டு எல்லைக்குள் மீன்பிடிக்க நேர்வதால் ஏற்படும் பிரச்னைகளை நான் அறிவேன். அந்தப் பிரச்னைகளில் இருந்து அவர்கள் விடுபட, ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக இங்கு நாங்கள் தொடங்கி வைத்திருக்கும் திட்டம் உதவிகரமாக இருக்கும். மத்திய அரசின் திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சிறப்பாக எடுத்துச் சொல்கிறார். இதற்காக அவரை பாராட்டுகிறேன்.
அதேபோல மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு உரிய உதவிகளை செய்யும். தமிழகத்தில் 8 லட்சம் மக்களுக்கு சொந்த வீடு தேவைப்படுகிறது. நான் தமிழக அரசுக்கு வைக்கும் வேண்டுகோள், மத்திய அரசுக்கு அது தொடர்பான கோரிக்கையை நீங்கள் அனுப்பி வையுங்கள். முழுமையாக அதை மத்திய அரசு நிறைவேற்றித் தரும்.
நாடு முன்னேற கலாம் கண்ட கனவை, 75-வது சுதந்திரதினத்தை நாடு கொண்டாடும் தருணத்திற்குள் நான் எட்டவேண்டும். அதுதான் கலாமுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. 2025-க்குள் வளர்ச்சி பெற்ற இந்தியாவாக மாற்றுவோம். கலாம் நினைவிடம் அமைக்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆர்வமாக இருந்தார். இங்கு கலாமுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வேளையில், அம்மாவுக்கும் அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்’ என சுமார் 40 நிமிட பேச்சை முடித்தார் மோடி. நிறைவாக மத்திய அமைச்சர் பொன்னார் நன்றி கூறினார்.