பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் பள்ளியில் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார். விழாவின் முதல் நிகழ்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “வரும் 31-ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறையில் புதிய அறிவிப்பு வெளியிடப்படும்”, என மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் நீட் தேர்வு குறித்து புதிய அறிவிப்பு வெளியாகலாம் என சூசுகமாக தெரிவித்தார். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியிடம் உரிய அழுத்தத்தைக் கொடுத்திருப்பதாகவும், விரைவில் சாதகமான நல்ல முடிவை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் கூறினார்.
மேலும், ”பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், விரைவில் விபத்து காப்பீடு திட்டம் கொண்டு வருவதற்காக திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இதனால், 1.27 கோடி மாணவர்கள் பயன்பெறுவர். மேலும், பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் கார்டுகள் ஒரு மாதத்தில் வழங்கப்படும்.”, எனவும் கூறினார். 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது, ”பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில், 54,000 வினா மற்றும் விடைகள் அடங்கிய பதிப்புகள் வெளியிடப்படும். பிளஸ்1 வகுப்பு பொதுத் தேர்வு குறித்து மாதிரி வினாத்தாள் வெளியிடப்படும். மேலும், பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்புகள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் அச்சம் நீங்கி, எந்த தேர்வையும் எதிர்கொள்ளும் திறமை உருவாகும். அதற்காக தமிழகம் முழுவதும் 450 மையங்களில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.”, என தெரிவித்தார்.