Advertisment

டி.டி.வி.தினகரன் நீக்கம் : இரட்டை இலை வழக்கில் ஓ.பி.எஸ்.ஸுக்கு லாபம்!

ஓ.பி.எஸ். அணியினர் யாரும் இவர்களுடன் இணைய விரும்பவில்லை. எனவே இந்தத் தீர்மானம் தேர்தல் ஆணைய வழக்கில் ஓ.பி.எஸ்.ஸுக்கு சாதகமான சூழலை உருவாக்கும்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
டி.டி.வி.தினகரன் நீக்கம் : இரட்டை இலை வழக்கில் ஓ.பி.எஸ்.ஸுக்கு லாபம்!

டி.டி.வி.தினகரன் துணைப் பொதுச்செயலாளராக செயல்பட முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால், தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை வழக்கு என்ன ஆகும்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

Advertisment

அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், வருகிற 14-ம் தேதி முதல் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயண திட்டத்தை அறிவித்திருக்கிறார். தவிர, ஆகஸ்ட் 4, ஆகஸ்ட் 9 ஆகிய தேதிகளில் கட்சிப் பதவிகளில் காலியான இடங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார். மாவட்ட அளவிலான தொழிற்சங்க நிர்வாகிகள் சிலரை நீக்கவும் செய்தார்.

இதனால் டி.டி.வி.தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக கூறி வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி உருவானது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10-ம் தேதி (இன்று) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ,தி.மு.க. தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் போட்டு, ‘டி.டி.வி.யின் நியமனமே சட்டவிரோதமானது. எனவே அவர் துணைப் பொதுச்செயலாளராக செயல்பட முடியாது. கட்சிப் பதவிகளுக்கு அவர் யாரை நியமித்தாலும், அதுவும் செல்லாது’ என தீர்மானம் நிறைவேற்றினர்.

publive-image டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.யின் டார்ச்சரை சமாளிக்கவும், ஓ.பி.எஸ். அணியுடன் இணைப்பை முன்னெடுக்கவும் இந்த தீர்மானத்தை எடப்பாடி அணியினர் முன்னெடுத்ததாக தெரிகிறது. ஆனால் இரட்டை இலைக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் அம்மா அணி தொடர்ந்திருக்கும் வழக்கில் இது தாக்கத்தை உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது.

அம்மா அணி சார்பில் மொத்தம் 5 லட்சத்திற்கும் அதிகமான அபிடவிட்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியில் இருந்து சாதாரண கிளைச் செயலாளர் வரை அங்கு தாக்கல் செய்திருக்கும் அபிடவிட்டில், கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவையும், துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனையும், தலைமை நிலைய செயலாளராக எடப்பாடி பழனிசாமியையும் ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டிருக்கிறார்கள்.

ஆனால் இப்போது ஒரு தீர்மானம் மூலமாக அவர்களே டி.டி.வி.நியமனம் செல்லாது என அறிவித்திருப்பதுதான் விவகாரமே! இந்தத் தீர்மான நகலை ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்களோ, அல்லது வேறு யாரோ தேர்தல் ஆணைய கவனத்திற்கு எடுத்துச் செல்லும்பட்சத்தில் உரிய விளக்கத்தை தேர்தல் ஆணையம் கேட்க வாய்ப்பு இருக்கிறது. அப்போதும் இந்த தீர்மான நிலைப்பாடையே எடப்பாடி அணி சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் இவர்கள் சமர்ப்பித்த 5 லட்சத்திற்கும் அதிகமான அபிடவிட்கள் செல்லாததாகுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

publive-image ஓ.பன்னீர்செல்வம்

‘அப்படியொரு சூழல் ஏற்பட்டால், மீண்டும் டி.டி.வி.தினகரன் பெயரை சேர்க்காமல் அபிடவிட் வழங்க தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி அணி அனுமதி கேட்கலாம். அப்படி அனுமதி கிடைத்தால், சசிகலா பெயரை பொதுச்செயலாளராக மீண்டும் சேர்ப்பார்களா? என்பது தெரியவில்லை. இனி பழைய மாதிரி 5 லட்சம் பேரிடம் அபிடவிட் பெறுவதும் சுலபமான காரியம் இல்லை.

எடப்பாடி அணியினர் சொல்வதுபோல, சில நாட்களில் ஓ.பி.எஸ். அணி இவர்களுடன் வந்து இணைந்தால் மேலே சொன்ன பிரச்னைகள் எதுவும் இல்லை. ஆனால் ஓ.பி.எஸ். அணியினர் யாரும் இவர்களுடன் இணைய விரும்புவதாக தெரியவில்லை. எனவே இந்தத் தீர்மானம் தேர்தல் ஆணைய வழக்கில் ஓ.பி.எஸ்.ஸுக்கு சாதகமான சூழலை உருவாக்கும்!” என்கிறார், பெயரை குறிப்பிட விரும்பாத அ.தி.மு.க. வழக்கறிஞர் ஒருவர்.

ஓ.பி.எஸ். அணி தங்களுடன் வந்து இணையும் என யாரோ உருவாக்கிக் கொடுத்த நம்பிக்கையில் எடப்பாடி அணி தங்களுக்கு தாங்களே குழியை வெட்டிக் கொண்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இன்னொரு தரப்பினரோ, விருப்பம்போல கட்சி நிர்வாகிகளை நீக்கவும் நியமிக்கவும் ஆரம்பித்துவிட்ட தினகரனை கட்டுப்படுத்தி, கட்சியை தனது கட்டுக்குள் கொண்டுவர இதைத்தவிர எடப்பாடிக்கு வேறு வழியில்லை என்கிறார்கள். அடுத்தடுத்த காட்சிகள்தான் இதில் யாருக்கு வெற்றி? என்பதை முடிவு செய்யும்.

O Panneerselvam Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment