இன்று விடியற்காலையில் கிளம்ப வேண்டிய ஃபிளைட் இன்னும் கிளம்பாததால், சென்னை ஏர்போர்ட்டில் தன் குடும்பத்தினருடன் தவித்து வருகிறார் பாபி சிம்ஹா.
ஹீரோ, வில்லன் என பல படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருபவர் பாபி சிம்ஹா. ‘ஜிகர்தண்டா’ படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். இவருடைய மனைவியான ரேஷ்மி மேனன், சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
பாபி சிம்ஹா, தன் மனைவி மற்றும் குழந்தையுடன் கோயம்புத்தூர் செல்வதற்காக இன்று காலை சென்னை ஏர்போர்ட் வந்துள்ளார். இண்டிகோ நிறுவனத்தின் ஃபிளைட்டில் டிக்கெட் பதிவு செய்திருந்தார் பாபி சிம்ஹா. ஆனால், காலை 5.50 மணிக்கு கிளம்ப வேண்டிய ஃபிளைட், இன்னும் கிளம்பவில்லை. இதனால், பாபி சிம்ஹா, சினிமா பி.ஆர்.ஓ. மற்றும் ஆர்ட்டிஸ்ட் மேனேஜரான நிகில் முருகன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்து வருகின்றனர்.
ஃபிளைட் தாமதமாவதற்கான காரணம் கேட்டும், இண்டிகோ நிறுவன ஊழியர்கள் ஒருவர் கூட சரியாகப் பதிலளிக்கவில்லை என ‘ஐஇ தமிழ்’க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார். இண்டிகோ நிறுவன ஊழியர்களான நித்யா, பார்கவி, பிரேம், அர்ஜுன் ஆகியோர் தங்களை மரியாதைக்குறைவாக நடத்துவதாகவும் பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார். அதிலும், மேனேஜரான பிரேம், ‘இந்தியாவுல பிறந்தா இப்படித்தான் காத்திருக்கணும்’ என்று கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாபி சிம்ஹா வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள பி.ஆர்.ஓ. நிகில் முருகன், “பயணிகள் 5 நிமிடங்கள் வந்தால் கூட கவுண்டரை மூடிவிடும் ஊழியர்கள், இவ்வளவு நேரம் தாமதமாகியும் குறைந்தபட்சம் ஒரு ‘ஸாரி’ கூட கேட்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
9.30 மணிக்கு கிளம்பும் ஃபிளைட்டில் செல்லலாம் என்று கூறிய இண்டிகோ ஊழியர்கள், ஏற்கெனவே வாங்கிய டிக்கெட் இல்லாமல், கூடுதலாக ஒவ்வொருவரிடமும் ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால், அந்த ஃபிளைட் கூட இல்லாமல் பயணிகளை ஏமாற்றி வருவதாக பாபி சிம்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.