சிவில் சர்வீஸ் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. பலர் எழுதிய இந்த தேர்வில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பொறுப்புகளுக்கு 829 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிரதீப் சிங் என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் முதலிடம் பெற்றுள்ளார். இந்நிலையில் திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75ஆவது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதையடுத்து, ஸ்ருதன் ஜெய்யிடம் நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பாக தொடர்பு கொண்டு வாழ்த்துகளோடு சில கேள்விகளையும் முன் வைத்தோம்.
ரிசல்ட் வந்தவுடன் அப்பா என்ன சொன்னார்?
Success.... Success... இது தான் அப்பா முதன் முதலில் சொன்னது. அவர் எப்போதும் எந்த காரியம் வெற்றிகரமாக நடந்தாலும் சக்ஸஸ் என்று ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொள்வார். ஸோ, நான் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் அவர் இதைத் தான் சொன்னார். அவருக்கு அவ்வளவு சந்தோஷம், நான் தேர்ச்சி பெற்றதில். ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளது.
ஐஏஎஸ் விதைக்கு காரணம் யார்?
எனக்கு சிறு வயது முதலேயே சமூக பணிகளில் ஆர்வம் அதிகம். சமூகம் சார்ந்த விஷயங்கள் என்றால் அதில் ஏனோ எனக்கு நாட்டம் இருந்தது. சிரத்தை எடுத்து செய்வேன். ஸோ, அப்படி வளர்ந்தது தான் இந்த எண்ணமெல்லாம். மற்றபடி, ஐஏஎஸ் தான் ஆக வேண்டும் என்றும் வெறியோடு-லாம் இருந்ததில்லை. சமூகம் சார்ந்த எனது எண்ணமே, என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது.
அப்பா சினிமா துறையில் பெரிய பிரபலமாச்சே. நீங்க நடிகராக விரும்பலையா?
கலை எனது வீட்டில் எப்போதும் இருக்கும். நான் முறையாக கர்நாடிக் கற்றுக் கொண்டவன். கல்லூரி காலத்தில் நிறைய ஸ்டேஜ் ஷோ செய்திருக்கிறேன். கலை என்னுள் எப்போதும் உண்டு. ஆனால், அதற்காக நடிக்க வேண்டும் என்றோ, நடிகனாக வேண்டும் என்றோ நினைத்ததில்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு நடிப்பதை விட படிப்பதில் தான் ஆர்வம் அதிகம்.
ஐஏஎஸ் முயற்சியை ரீவைண்ட் பண்ண முடியுமா?
ஓ எஸ்... கண்டிப்பாக. நான் படித்து முடித்தவுடன் நாஸ்காம் நிறுவனத்தில் தான் வேலைப் பார்த்து வந்தேன். வேலை செய்து கொண்டே தான் சென்னையில் ஐஏஎஸ்-க்கும் படித்துக் கொண்டிருந்தேன். பின், ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அதன் பிறகு, டெல்லிக்கு சென்று முக்கியமான ஒரு வருட கோர்ஸ் ஒன்றை முடித்தேன். அதன் பிறகு, மீண்டும் முயற்சி செய்த போது க்ளிக் ஆகிவிட்டது. ஆக்சுவலி, இது எனது 2வது அட்டெம்ப்ட். அம்மா எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவாக இருந்தார். அவருக்கு எப்போதும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
சினிமா துறை சார்ந்து உங்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தது யார்?
சற்றே தயக்கத்துடன், "அது நிறைய பேர் சொன்னாங்க. அப்பா மேல உள்ள அன்புல நிறைய பேர் பேசுனாங்க. ஆனா, யார் யார்-ங்கிற பெயரை அப்பாவிடம் கேட்டுத் தான் சொல்லணும் சார்" என்று அப்பா மேல் உள்ள மரியாதையை அப்பட்டமாக வெளிப்படுத்தி பதிலை நிறைவு செய்தார் ஸ்ருதன்!.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.