போதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை உண்டாக்கியதாக நடிகர் ஜெய் கைதாகி, பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அவரது கார் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-28, சுப்ரமணியபுரம், கோவா உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஜெய். இவரது அடுத்த படமான 'பலூன்' விரைவில் ரிலீசாக உள்ளது. இவர் நேற்று இரவு இரண்டு சக நடிகர்களோடு சென்னையில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாக தெரிகிறது.
விருந்து நிகழ்ச்சி முடிந்து நடிகர் ஜெய் ‘ஆடி’ காரில் வீட்டிற்கு சென்றார். காரை அவரே ஓட்டினார். காரில் அவருடன் நடிகர் பிரேம்ஜியுன் உடனிருந்துள்ளார்.
அடையாறு மலர் மருத்துவமனை அருகே பாலத்திற்கு கீழ் சென்றபோது வேகமாக சென்ற கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி நின்றுவிட்டது.
கார் மோதிய அதிர்ச்சியில் நடிகர் ஜெய்யும், பிரேம்ஜியும் காருக்குள்ளேயே மயக்கத்தில் கிடந்துள்ளனர். இதைப்பார்த்த பொதுமக்கள் அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து காருக்குள் மயங்கி கிடந்த நடிகர் ஜெய்யையும், பிரேம்ஜியையும் தட்டி எழுப்பினர். அப்போது இருவரும் போதையில் இருந்ததாக தெரிகிறது.
இதனால் அவர்கள் இருவரையும் போலீசார் அடையாறு போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போதை தெளிந்த பிறகு அவர்களிடம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
காருக்கு மட்டும் முன்பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது. ஜெய்யும், பிரேம்ஜியும் காயம் எதுவுமில்லாமல் தப்பிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து நடிகர் ஜெய் மீது குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை உண்டாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜெய் ஏற்கனவே மயிலாப்பூரில் குடிபோதையில் காரை ஓட்டிய வழக்கில் சிக்கி அபராதம் செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.