குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
நடிகர் ஜெய், கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, நண்பர்களுடன் தனது சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாரில் உள்ள மலர் மருத்துவமனை அருகே உள்ள பாலத்திற்கு கீழே தடுப்புச் சுவரில் அவரது கார் மோதி விபத்துக்குள்ளானது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர் ஜெய் மது அருந்தி இருந்ததாக தெரியவந்தது.
இதுதொடர்பாக, அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நடிகர் ஜெய் கைதாகி பின் விடுதலையானார். ஆனால், ஏற்கனவே அவர் மீது இதேபோன்று குடி போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக இரு வழக்குகள் கிண்டி மற்றும் அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூன்றாவது முறையாக அவர் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தி மீண்டும் சிக்கினார். இதுதொடர்பான வழக்கில் ஜெய் சைதாப்பேட்டை கோர்ட்டில் வியாழக்கிழமை ஆஜராக வேண்டும். ஆனால், அன்று ஆஜராகாததால் சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
ஆனால், வெள்ளிக்கிழமையும் ஜெய் ஆஜராகவில்லை. இதையடுத்து, இரண்டு நாட்களுக்குள் நடிகர் ஜெய்யை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை அக்டோபர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, ஜெய்யை கைது செய்ய போலீஸார் அவரது வீட்டிற்குச் சென்ற போது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால், நடிகர் ஜெய் தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் ஜெய் சனிக்கிழமை காலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.