பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தபோது, உடனடியாக பாராட்டியதற்கு பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் ஆனந்த விகடன் இதழில் கட்டுரை தொடரை எழுதி வருகிறார். அதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபோது அதனை ட்விட்டரில் பாராட்டியதாக குறிப்பிட்டுள்ளார். கருப்பு பணத்தை ஒழிக்கும் வழியில் ஆதரவு தெரிவித்தேன் என்றும், ஆனால் பொருளாதாரம் பயின்ற நண்பர்கள் எனது ஆதரவு குறித்து விமர்சித்தனர். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று அடம்பிடிக்காமல் தவற்றை ஒப்புக்கொண்டால், பிரதமருக்கு என்னுடைய இன்னொரு சலாம் காத்திருக்கிறது எனவும் கமல்ஹாசன் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆனந்த விகடன் இதழில் நடிகர் கமல்ஹாசன் எழுதிய தொடரில் குறிப்பிட்டுள்ளதாவது: “பணமதிப்பு நீக்கம் (Demonitisation) பற்றி மாண்புமிகு பிரதமர் மோடி அறிவித்தபோது, கட்சி வரையறைகள் கடந்து இச்செயல் பாராட்டப்பட வேண்டும் என்று ட்விட்டரில் என் கருத்தை வெளியிட்டேன். கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்கான ஒரு வழி என்ற முறையில் முழு ஆதரவையும் அத்திட்டத்திற்குத் தருவது மட்டுமன்று, அதனால் விளையும் சிறு இடைஞ்சல்களையும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றே நான் நினைத்தேன். ஆனால், என் சகாக்கள் பலரும், பொருளாதாரக் கல்வி பெற்ற சிலரும் அலைபேசியில் கூப்பிட்டு, என் ஆதரவுக்கு எதிராகத் தங்களின் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்கள்.
கொஞ்சநாள் கழித்து, டிமானிட்டைசேஷனை நடைமுறைப்படுத்திய விதம் பிழையானது; ஆனால், யோசனை நல்ல யோசனைதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். அதற்கும் பிற்பாடு பொருளாதார வல்லுநர்களின் விமர்சனக்குரல்கள் வலுத்தன. சரி, சில திட்டங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டாலும் நடைமுறையில் தோல்வியுறும் என்று நினைத்துக் கொண்டேன்.
தற்போது `யோசனையே கபடமானது’ என்பது போன்ற உரத்த குரல்களுக்கு அரசிடமிருந்து பலவீனமான பதில்களே வரும்போது சந்தேகம் வலுக்கிறது. திட்டத்திற்குப் பாராட்டு சொன்னதில் சற்றே அவசரப்பட்டுவிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று அடம்பிடிக்காமல் தவற்றை ஒப்புக்கொண்டால், பிரதமருக்கு என்னுடைய இன்னொரு சலாம் காத்திருக்கிறது. தவறுகளைத் திருத்தி ஆவன செய்வதும், முக்கியமாக அதை ஒப்புக்கொள்வதும் பெருந்தலைவர்களுக்கான அடையாளம்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.