அதிமுகவின் இரு அணிகளும் இணையும் சற்றுநேரத்திற்கு முன்பு, ”தமிழர்களின் தலையில் ‘கோமாளிக்குல்லா’ அணியப்படுகிறது, தமிழர்கள் வெகுண்டெழ வேண்டும்”, எனவும் ”காந்தி குல்லா, காவி குல்லாவுக்கு பிறகு கோமாளிக்குல்லா” அணிவிக்கப்படுகிறது என பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் தொனியில் கமல்ஹாசன் ட்விட்டரில் சாடினார்.
அதிமுக அம்மா அணி மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணி ஆகிய இரு அணிகளும் இணையுமா? இணையாதா என்பதே தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஒட்டுமொந்த இந்தியாவும் சமீப நாட்களாக கேட்டுக்கொண்ட கேள்வியாக அமைந்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரு அணிகளும் இணைந்துவிடும் என்பதை உறுதியாக நம்புவதற்கு அச்சாரமாக, மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவகம் அலங்கரிக்கப்பட்டது. அங்கு இரு அணிகளும் இணைவர் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அன்றைய தினம் இணைப்பு நடைபெற முடியாமல் போனது.
தொடர்ந்து இரு அணிகளிடையேயும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில், திங்கள் கிழமை இணைப்பு சாத்தியம் என தகவல்கள் வெளியாகின. மேலும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு துணை முதலமைச்சர் பொறுப்பும், அவரது அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் செம்மலை ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என கூறப்பட்டது.
அவர்களுக்கு அன்றைய தினமே பதவியேற்று வைப்பதற்காக, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தார். சென்னை வந்தார். மேலும், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆளுநர் மாளிகை சென்றார்.
இதனிடையே செவ்வாய் கிழமை தமிழகம் வரவிருந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருகை மீண்டும் ரத்து செய்யப்பட்டது. மேலும், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கினால் தான் இணைவோம் என ஓ.பி.எஸ் தரப்பு கோரிக்கை வைத்ததால் இணைப்பு இன்று சாத்தியமாகாது என பேசப்பட்டது. இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி தலைமை அலுவலகம் வந்தார். அதன்பின், சற்றுநேரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அங்கு வந்தார். இதையடுத்து இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். இரு அணிகளும் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, இரு அணிகளின் இணைப்புக்கும் சற்று நேரத்திற்கு முன்பு “காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா.”, என நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டார்.
இதில், காவிக்குல்லா என்பது பாஜகவை குறிக்கும் விதமாக உள்ளது. தமிழக அரசை நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக ட்விட்டரில் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.