மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக போராடிவந்த மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது குறித்து நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.
சேலம் தாதனூரை சேர்ந்த வளர்மதி, பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்து வருகிறார். இவர், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக போராடி வந்தார்.
இந்நிலையில், சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள மகளிர் கலைக்கல்லூரியில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன்களுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை பிரசுரித்ததாக கடந்த ஜூலை மாதம் 13-ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மறியலில் ஈடுபட்டதாக கூறி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல் துறை ஆணையர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, வளர்மதி கோவை மத்திய சிறையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். இதனிடையே வளர்மதியை சேலம் பல்கலைக்கழகம் நீக்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், தன் மகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தந்தை மாதையன் கடந்த ஆகஸ்டு 2-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஆகஸ்டு 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சேலம் மாநகர காவல் ஆணையருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், இந்த வழக்கு செவ்வாய் கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், ”வளர்மதி வளர்,பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம்”, என பதிவிட்டார்.