மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த நடிகர் சிவாஜியின் சிலை நள்ளிரவில் அகற்றப்பட்ட நிலையில், “இனி ஒரு சிலை செய்வோம்: அதை எந்நாளும் காப்போம்”, என நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் மறைந்த நடிகர் சிவாஜிக்கு சிலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலையால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கும் வரை பொதுப்பணித்துறை அச்சிலையை அகற்றாமல் இருந்தனர்.
இந்நிலையில், சிவாஜிக்கு 28,300 சதுர அடியில் 2.8 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் பொதுப்பணித் துறை சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிவாஜியின் சிலையை அகற்ற பொதுப்பணித்துறைக்கு அனுமதி கிடைத்ததையடுத்து, வியாழக்கிழமை நள்ளிரவில் சிவாஜியின் சிலையை அகற்றினர். பகல் நேரத்தில் சிலையை அகற்றினால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதால், நள்ளிரவில் அகற்றப்பட்டதாக பொதுப்பணித் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
அகற்றப்பட்ட சிவாஜி சிலை, கட்டப்பட்டு வரும் சிவாஜி மணிமண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சிலையயை வைப்பதற்கான பீடம் தயாரானவுடன் அதன்மேல் சிலை வைக்கப்படும்.
நள்ளிரவில் சிவாஜியின் சிலை அகற்றப்பட்டதால், திரையுலகினர் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை ட்விட்டரில் பதிவிட்ட நடிகர் கமல்ஹாசன், ”சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம், அதை எந்த நாளும் காப்போம். அரசுக்குமப்பால் என் அப்பா”, என பதிவிட்டார்.
தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நடிகர் கமல்ஹாசன், பொதுப்பணித்துறை எடுத்த நடவடிக்கையை விமர்சிக்கும் விதத்தில் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.