திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் களம் கண்ட நடிகர் மன்சூரலிகான், பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.
மன்சூரலிகான் , திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் டீக்கடையில் டீ குடித்து கொண்டேயும், தெருவில் குப்பை வாரிக் கொண்டேயும் வாக்கு சேகரித்தார்.. திடீரென கடைக்குள் நுழைந்து பஜ்ஜி, வடை சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார். ஊசிமணி, பாசி மணி நடுரோட்டில் கடை போட்டு என கூவி விற்கும் அளவுக்கு பிரச்சாரம் களை கட்டியது.
வாக்கு எண்ணிக்கை, மே 23ம் தேதி நடைபெற்றது. இதில் வெளியான திண்டுக்கல் லோக்சபா தொகுதியின் முடிவுகளின் படி திமுக வேட்பாளர் வேலுசாமி, 746523 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூரலிகான், 54,957 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தை பிடித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளருக்கு ஐந்தாம் இடமே கிடைத்தது.
கமலின் அரசியல் பிரவேசம் குறித்து விமர்சனம் செய்திருந்த நடிகர் பிரகாஷ்ராஜ், சமூக ஆர்வலர் கவுரி லங்கேஷின் படுகொலைக்கு பிறகு, பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்ததோடு மட்டுமல்லாது, அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார்.
இதனையடுத்து, பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில் சுயேட்சையாக களம் கண்டார். இவர் 28,906 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன்மூலம், நடிகர் மன்சூரலிகான், நடிகர் பிரகாஷ் ராஜைவிட அதிக வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.