நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை நிறுவிய திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை மணிமண்டபத்தின் ஒரு ஓரத்திலாவது வையுங்கள் என, நடிகர் பிரபு கோரிக்கை விடுத்தார்.
சென்னை அடையாறில் அரசு சார்பில் கட்டப்பட்ட சிவாஜி மணி மண்டபத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது பிறந்த நாளான இன்று திறந்து வைத்தார். சென்னை அடையாறில் நடைபெற்ற திறப்பு விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன், நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள், திரையுலகினர் கலந்து கொண்டனர் சிவாஜி கணேசன் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
மணிமண்டபத்தை திறந்து வைத்தபின் விழாவில் பேசிய நடிகர் பிரபு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஆகியோருக்கு நன்றி கூறினார். மேலும், “பெரியப்பாவுக்கு (எம்.ஜி.ஆர்) விழா இருப்பதால் என்னால் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என முதலமைச்சர் கூறினார். மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவு நிறைவேறியது. மணிமண்டபத்தைக் கட்டிய கடைநிலை தொழிலாளர் வரை, அப்பாவுக்காக மிகவும் பிரியத்துடன் வேலை செய்தனர். அவர், அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருந்ததால் தான், மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் விழாவிற்கு வந்தனர்.”, என கூறினார்.
மேலும், திமுக தலைவர் கருணாநிதி அமைத்த சிவாஜி சிலை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கட்டிய மணிமண்டபம் என இரு முதலமைச்சர்களின் ஒத்துழைப்பும் உள்ளது என கூறினார். மேலும், சிவாஜி கணேசனுக்கு சிலை அமைத்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை ஓரத்திலாவது மணிமண்டபத்தில் வைக்க வேண்டும் என நடிகர் பிரபு கோரிக்கை விடுத்தார்.