மெரினாவில் சிவாஜி சிலை அதிரடி அகற்றம் : அடையாறு மணிமண்டபத்திற்கு கொண்டு சென்றனர்

திரையுலக பிரமுகர்களும், சிவாஜி சமூகநலப் பேரவையினரும் சிவாஜியின் அந்த சிலையை மெரினாவிலேயே இன்னொரு இடத்தில் அமைக்கவேண்டும்; மணி மண்டபத்தில் வேறு சிலை அமைக்கலாம் என...

மெரினா சாலையில் அமைந்த சிவாஜிகணேசன் சிலை அதிகாலையில் அகற்றப்பட்டது. அந்த சிலை சிவாஜியின் மணிமண்டபத்தில் வைக்கப்படுகிறது.

சென்னையில் மெரினாவையொட்டிய காமராஜர் சாலையும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையும் சந்திக்கும் இடத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு கம்பீர முழு உருவச்சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், சிலையை அகற்றி சிவாஜிக்கு சென்னை அடையாறில் அமையும் மணிமண்டபத்தில் வைக்க அரசு சம்மதம் தெரிவித்தது. அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் திரையுலக பிரமுகர்களும், சிவாஜி சமூகநலப் பேரவையினரும் சிவாஜியின் அந்த சிலையை மெரினாவிலேயே இன்னொரு இடத்தில் அமைக்கவேண்டும்; மணி மண்டபத்தில் வேறு சிலை அமைக்கலாம் என வலியுறுத்தி வந்தனர். இந்தச் சூழலில் இன்று (ஆகஸ்ட் 3) மெரினாவில் காமராஜர் சாலையில் அமைந்திருந்த சிவாஜி சிலை அதிகாலையில் அதிரடியாக அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

அங்கிருந்து அடையாறில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மணி மண்டபத்திற்கு சிலையை எடுத்துச் சென்றனர். மணிமண்டபம் திறப்பு விழாவின்போது இந்த சிலையும் திறக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே மணிமண்டபம் திறப்பு விழாவும் தள்ளிக்கொண்டே போவதால சிவாஜி அபிமானிகள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.

சிவாஜி சிலை அகற்றப்பட்டபோது..

கலைத்துறையில் சுமார் அரை நூற்றாண்டு காலம் முத்திரை பதித்தவரான சிவாஜி, கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமானார். அதனையடுத்து, அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை ஏற்ற தமிழக அரசு, சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே சிவாஜி மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கியது. பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது. இதனிடையே, கடந்த 2006-ஆம் முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைத்தார்.

இதனையடுத்து, மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது, “தமிழக அரசே மணிமண்டபம் கட்டித்தர வேண்டும்” என நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று, மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மணி மண்டபம் கட்டும் பணி பொதுப் பணித்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 24 ஆயிரம் சதுர அடி நிலத்தில் 2 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவில் மணி மண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது. இது கிண்டியில் உள்ள தியாகிகள் மணி மண்டபம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் சிவாஜி கணேசன் சிலையை அமைப்பதற்கான பீடம் கட்டப்பட்டு இருக்கிறது. சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையை அந்த பீடத்தில் வைக்கிறார்கள்.

திராவிட கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சிறு சிறு கோபுரங்கள் வடிவில் கட்டிட கலை நிபுணர்களால் மண்டபம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்கள் வசதிக்காக மணிமண்டபத்தின் உள்ளே குடிநீர் வசதி மற்றும் கழிவறைகள் வசதி செய்யப்பட்டுள்ளது. மணிமண்டபத்தில் சிவாஜியை நினைவுபடுத்தும் வகையில் அவரது அரிய புகைப்படங்கள் உள்ளிட்டவைகள் இடம் பெறவுள்ளது.

மணி மண்டபத்தில் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை திறந்து வைப்பார். இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. திரைப் பிரபலங்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close